Friday, October 29, 2004

நாக்பூரில் மனித உரிமை மீறல்

நாக்பூர் தோல்விக்குபிறகு வரக்கூடிய செய்திகள்:

நாக்பூர் ஆடுகளமேலாளர் சிட்னி ஆடுகளமேலாளராக நியமனம்: ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு.

நாக்பூரில் கில்கிரிஸ்டுக்கு சிலை மற்றும் பாராட்டு விழா: விதர்பா கிரிக்கெட் சங்கம் முடிவு.

Zee/ESPN கோர்ட் வழக்கு வாபஸ்: இருநிறுவனங்களும் கிரிக்கெட் ஒளிபரப்பு செய்ய மறுப்பு.

BCCI தலைவர் பதவியை ஷரத் பவாருக்கு விட்டுக்கொடுக்கத் தயார்: மகேந்திரா

நாக்பூரில் ஆஸ்திரேலியா இந்திய அணியை கோழி அடிதாற்போல் தோற்கடித்தது மனித உரிமைமீறல்: சென்னை வழக்கறிஞர் வழக்கு

சீன கிரிக்கெட் அணிக்கு ஐசிசி முழுஅந்தஸ்து: இந்திய தோல்வி எதிரொலி

மும்பை ஆடுகளத்தில் ஆடுமாடுகளை அனுப்பி புல்லை மேயவிடவேண்டும்: கங்குலி கோரிக்கை.

மும்பை ஆடுகளத்தை சிவசேனைக் குழு மேற்பார்வையில் தயார்செய்ய வேண்டும்: கவாஸ்கர் கருத்து

மும்பை டெஸ்ட் அணித்தேர்வில் குழப்பம்: இந்திய வீரர்கள் பார்திவ் படேல் இல்லாமல் விளையாடமாட்டோம் என அறிவிப்பு.

பிரெட் லீ இந்திய அணியில் சேர்ந்தாரா? மும்பையில் பரபரப்பு. டிக்கெட் விற்பனை 300% அதிகரிப்பு
Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Tuesday, October 12, 2004

கல்லூரி வாசல்

புதிதாக கல்லூரியில் நுழைந்த அந்த முதல் ஒரிரு மாதங்களை என்னால் மறக்க முடியாது. ஒவ்வொரு நாளும் ஒரு புது வித அனுபவமாக இருந்தது. ஆனாலும், ஒரு பயம் இருக்கத்தான் செய்தது: 'ராகிங்'. அதுவரை காதளவில் கேள்விப்பட்ட ஒன்றை நேரில் சந்திக்கும் போது ஒருவித கிலி வரத்தான் செய்தது. பஸ்சை விட்டு இறங்கி கல்லூரி வாசலில் நுழையும் முன்பு, first years யாராவது தென்பட மாட்டார்களா என்று கண்கள் தேடும். யாரும் இல்லையென்றால், அய்யோ இன்னைக்கு யார் கிட்ட தனியா மாட்டிப்போமோ என்ற பயத்தோடு அரக்க பறக்க lecture hall நோக்கி கால்கள் ஓடும்.

"டேய்...இங்க வாடா!" இந்த குரலைக் கேட்டால் என் இதயத்துடிப்பு எலெக்ட்ரிக் டிரைன் வேகத்தில் செல்லத் தொடங்கும்.

"பேர் என்னடா"

"....."

"என்ன ஊமையா"

"....-ஸார்..." நான் சொல்லி முடிப்பதற்க்குள்,

"டேய் அதோ ஒரு சிட்டு போவுதே..அது first yearஆ?"

"...தெரியாது"

"போய் கூட்டிகிட்டு வாடா"

அதற்குபின் நான் ஒரு spectator தான்.

அவர்கள் ஒவ்வொருவரும் அவளிடம் கொஞ்சி கொஞ்சிப் பேச, அவர்கள் அடிக்கும் மட்டமான ஜோக்குகளுக்கு சிரித்து...சில சமயங்களில் நெலிந்து...அழாத குறையாக... "ஒடுடா" என்ற குரல் கேட்டவுடன்....தலை தெறிக்க ஒடிய அனுபவங்கள் பல!!

என் கதையை விட ஹாஸ்டல் கதைகள் இன்னும் மோசமானவை. சீனியர்களுக்கு பணிவிடை செய்வதிலிருந்து (சிகரெட், பீர் உட்பட) சில வக்கிரமான மூடர்களிடம் சிக்கி, சொல்லக் கூசும் விஷயங்களை செய்து...தூக்கமின்றி அடுத்த நாள் lecture hall'ல் தூங்கி...இவர்கள் படும் பாட்டை பார்த்தால், இவர்களுக்கு நாம் எவ்வளவோ தேவலை என்று தோன்றும்.

கட்டாயம் நாம் இந்த மாதிரி ஏதும் செய்யக்கூடாது என்று அன்று நினைத்தாலும், நான் சீனியரானபின், harmless ராகிங் என்னும் சாக்கை வைத்துக்கொண்டு நானும் ஒரிரு அல்ப ராகிங்க்கு துணை போனதுண்டு. ஆனால், கடந்த சில வருடங்களாக கல்லூரிகளில் நடந்தேறும் ராகிங் சம்பவங்களை படிக்கும் போது என் மனதில் ஒருவித குற்ற உணர்வு வரத்தான் செய்கிறது. சமீபத்தில், கிழ்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் நடந்த ஒரு சம்பவத்தில், "ஸார்" என்று கூப்பிடாத மூன்றாம் வருட மாணவர்களை ஐந்தாம் ஆண்டு மாணவர்கள் அடித்து விட்டனர். ராகிங் என்ற போர்வையில் இங்கு நடைபெற்றது ego clash தான்.

இதை விட கொடூரமான ராகிங் கதை சில வருடங்களுக்கு முன்னர் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நடந்தது நினைவிலிருக்கலாம். ராகிங் மூலம் மாணவர்களுக்கிடையே ஒருவித நட்புப் பினைப்பு ஏற்படுகிறது என்ற வாதத்தை இனிமேலும் ஏற்க முடியாது. இதற்கு முடிவு காணும் வகையில், தமிழக மருத்துவக் கல்லூரிகளில் ராகிங் தடுப்பு குழுமங்கள் நிறுவப்பட்ட செய்தி சற்று நெகிழ்வைத் தருகிறது. ராகிங்கை ஒழிக்கும் ஆயுதம் மாணவர்களிடம் தான் உள்ளது. இனிமேலும் இந்த காட்டுத்தனமான நிகழ்வுகள் நடக்காமல் இருக்கட்டும்.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Saturday, October 09, 2004

கிரிக்கெட்: திருந்தாத ஜென்மங்கள்

நினைத்தபடியே பெங்களூரில் சரியான உதை வாங்க தயாராகிவிட்டது நமது அணி. முதல் இன்னிங்ஸில் ஆடியதை விட இன்னும் மட்டமாக தங்களால் ஆட முடியும் என நிரூபிக்கும் வகையில் இன்று ஆட்டம் போட்டார்கள் நம் திருவாழத்தான்கள்.

முதல் மூன்று விக்கெட்டும் ஆஸ்த்ரேலிய அணி பந்து வீச்சாளர்களுக்கு கிட்டவில்லை. சேவாக் விக்கெட் அம்பயர் பில்லி பொவ்டனுகும், சோப்ரா விக்கெட் அம்பயர் ஸ்டீவ் பக்னர்ருக்கும் கங்குலி விக்கெட் ரன் அவுட்டாகவும் கிடைத்தது. நான் முன்பே கூறியது போல சோப்ரா இனியும் இந்த ஆஸ்திரேலிய அணியிடம் சோபிக்க முடியாது என்பது தெளிவாகிவிட்டது. அவரை மூட்டை கட்டி வீட்டுக்கு அனுப்ப வேண்டியது மட்டுமே பாக்கி.

கங்குலி ஆட்டம் இழந்த விதம் ஒன்றை வெட்டவெளிச்சமாகியுள்ளது. அவருக்கு உயர எழும்பும் பந்தை ஆடுவதற்கு சரிவர வராது என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால், இதை சரிசெய்ய அவர் ஏதும் ஆட்ட மாற்றங்களை செய்ததாக தெரியவில்லை. மாறாக, அவர் வேகப் பந்து வீச்சாளர்களை சந்திக்கும் பொழுது, எப்படியாவது நான் - ஸ்ட்ரைக்கர் என்ட்டுக்கு செல்லுவதில் தான் அதிக கவனம் செலுத்துகிறார். சமீபத்தில், இங்கிலாந்தில் நடந்த ஒரு நாள் ஆட்டத்தில், ஹார்மிசன் பந்து வீசிய போது, அரக்க பறக்க ஒரு ரன்னை எடுக்கப்போய், லட்சுமண் மீது மோதி, அசடு வழிய பெவிலியன் திரும்பினார். இன்றும், அதே மாதிரி, இல்லாத ஒரு ரன்னை எடுக்கப்போய், வீனாக ஆட்டம் இழந்தார்.

நேற்று நான் கூறியது போல், லட்சுமணன் இன்னும் நாலு-அல்லது-ஐந்து இன்னிங்ஸ் பிறகு தான் ஒரு நல்ல இன்னிங்ஸ் ஆட வாய்ப்பு உள்ளது. யுவராஜ் சிங், தானே ஏதாவது அடிபட்டுக்கொண்டு, அடுத்த சென்னை ஆட்டத்தில் ஆடாமல் இருப்பது நம் நாட்டுக்கு நல்லது (ஏனென்றால், இவர்களையெல்லாம், எதோ அரசு ஊழியர்கள் போல், BCCI ஒவ்வோரு ஆட்டத்திலும் ஆட விடுகிறார்கள் - ஒரு வேலை, இவர்களுக்கு பென்ஷன் கூட கொடுப்பார்கள் போல!)

இந்த ஆட்டத்தின் ஒரே சந்தோஷம், ஹர்பஜன் சிங்கின் பந்து வீச்சு. நாளை மழை பெய்து ஆட்டம் தடைபட்டால் ஒழிய, வேறு எந்த 'miracle'லும் நடக்க வாய்ப்பு இல்லை. ராகுல் ட்ராவிட் கொஞ்சம் காட்ஜ் அடித்து தன் ஆட்டத்தை improve செய்வார் என நம்புகிறேன்.

பட்டை நாமத்துடன், அதன் அவல ரசிகர்களும் (நான் உட்பட) சென்னையிலாவது நம் மானத்தை காப்பாற்றுவார்கள் என்ற (அவ)நம்பிக்கையில் ஆஜர் ஆவோம். நம் அணியை திருத்துவது இருக்கட்டும், நாம் எப்போது திருந்துவோம்?!!
Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Thursday, October 07, 2004

இந்திய கிரிக்கெட் அணியின் சரிவு

பெங்களூர் டெஸ்ட் மேட்ச்சில் இந்திய அணி தோல்வியை நோக்கி வேகமாக முன்னேறிக்கொண்டிருக்கிறது. உலகின் தலைசிறந்த அணியாக மீண்டும் தன்னை பறை சாற்றியுள்ளது ஆஸ்திரேலியா. மார்டின் க்ளார்க் தன் முதல் ஆட்டத்திலேயே சதம் அடித்து சாதனை படைத்துள்ளார். கில்கிரிஸ்டும் தன் பங்கிற்கு சதம் அடிக்க, 474 ரன்களை குவித்தது ஆஸ்திரேலியா. ஸ்பின்னர்களின் சொர்கம் என கருதப்பட்ட பிட்சில், கெலன் மெக்ராத் மற்றும் காஸ்ப்ரொவிச் அருமையாக பந்து வீசி ஐந்து இந்திய விக்கெட்டுகளை விழ்தியுள்ளனர். ஷேன் வார்னின் அருமையான லெக் பிரேக் லட்சுமணனை விழ்த்த, 150/6 என்ற பரிதாபமான நிலையில் மூன்றாம் (கடைசி?) நாள் ஆட்டத்தை நம் அணி சந்திக்க உள்ளது.

இந்த முறை 2001 கொல்கத்தா மேஜிக் மீண்டும் நடைபெற ஆண்டவனை நாம் பிரார்த்தனை செய்வோமாக! கடந்த ஆறு மாதங்களாக, நம் மட்டையாளர்கள் மிக மட்டமாக ஆடி வருவதை அனைவரும் அறிவோம். ஆனால், உண்மையில் 2001க்கு பிறகு நம் அணியின் ஆட்டம் 'patchy'ஆக தான் இருந்து வருகிறது. 2002ல் வெஸ்ட் இன்டிஸ் டூரில் சுமாராக ஆடி 1-2 என்று தோல்வி அடைந்தனர். அதன் பிறகு, இங்கிலாந்தில், சம நிலையில் ட்ரா செய்தனர். ஆனால், அச்சமயத்தில் இங்கிலாந்து சுமாரான டீமாகத்தான் இருந்தது. பிறகு, நியூசிலாந்த் சென்று தோல்வியைத் தழுவினர். நியூசிலாந்த் அணி இந்தியா டூர் வந்த போதும் நாம் சுமாராகத்தான் விளையாடினோம்.
இந்திய அணி 2003-2004ல் ஆஸ்திரேலியா சென்று 1-1 என்ற வகையில் ட்ரா செய்தனர். ஆனால் என்னை பொருத்த வரையில் மெக்ராத், வார்ன், ப்ரெட் லீ இல்லாத ஆஸ்திரேலிய அணி பல் பிடிங்கிய பாம்பு போலத்தான் இருந்தது. எனவே, நாம் டிரா செய்தோம் என்று மார்தட்டிக்கொள்ள கூடாது என்பதே என் எண்ணம். அதே போல, அக்ரம், வகார் யூனஸ் இல்லாத பாகிஸ்தான் அணியைத்தான் நம் அணியால் வெல்ல முடிந்தது.

இந்த நிலைக்கு காரணம் என்ன? இந்த முறை சச்சின் இல்லாதது பெரிய இழப்பு. நம் அணியின் வீரர்கள் சிலரைப் பார்ப்போம்.

ஆகாஷ் சோப்ரா: 9 டெஸ்ட் மேட்ச் ஆடி, இரு முறை மட்டுமே அரை சதத்தை எட்டியுள்ளார். சுமாரான டெக்னிக் உடையவர். ஆனால் என்றைக்கும் மேட்ச் வின்னராகக் கூடிய திறமை இல்லாதவர்.

சேவாக்: திறமை இருந்தும், உதாசின போக்கால், அணிக்கு ஆற்ற வேண்டிய கடமையை மூன்றில் இரண்டு முறை தவற விடுபவர். (உதா: ICC trophy பாக் ஆட்டம், இன்றைய ஆட்டம் இரண்டிலும் ஆட்டம் இழந்த விதம்).

டிராவிட்: ICC test player of the yearஆனவுடன், யாராவது உப்பு சுற்றி போட்டிருந்தால் இப்படி தொடர்ச்சியாக fail ஆகாமல் இருந்திருப்பார்!

கங்குலி: தற்பொழுது ஒரளவுக்கு சுமாராக ஆடும் ஒரே ஆட்டக்காரர்.

லட்சுமணன்: பத்து இன்னிங்ஸ் ஆடினால், ஒன்றில் அட்டகாசமாக ஆடி, மற்ற ஒன்பதில் கேவலமான வகையில் ஆட்டமிழந்து, திரு திரு என characteristicஆக முழித்து பெவிலியன் திரும்புவதை பழக்கமாகிக் கொண்டிருப்பவர்.

யுவராஜ்: இவருக்கு என்ன ஆச்சு? ஆண்டவனுக்கே வெளிச்சம்!

ப்டேல்: சுமாரான விக்கெட் கீப்பர். முழங்கலுக்கும் கிழே எழும்பாத பிட்சிலும், இருபது அடிக்கு பின்னால் நின்று கொண்டு, பிடிக்காத கேட்சை பிடித்தேன் என்று சொல்லி, சைமன் கேட்டிச்சிடம் வாங்கிக் கட்டிக்கொள்பவர்!

ப்தான்: இந்திய அணியில் மட்டும் அல்ல, எந்த அணியிலும் தற்சமயம் இடம் பெறும் தகுதி படைத்த ஒரே இந்தியர்.

ஹர்பஜன்/கும்பிலே: உலகத் தர ஸ்பின்னர்கள் என்ற பெயரை ஆதிகாலத்தில் பெற்று, அந்த பெருமையிலேயே இன்றும் வாழ்ந்து வருபவர்கள்.

ஜாகிர் கான்: ஆன்ட்ரு லீபஸ் சம்பளம் வாங்க காரணமாக இருப்பவர்.

ஆக, இப்படிப்பட்ட மிகச் சாதாரணமான அணியிடம் அதிகமாக எதிர்பார்ப்பது நம் குற்றமோ??

ஆனாலும், 2001 கொல்கத்தா மேஜிக் மீண்டும் நடக்காதோ என்ற நம்பிக்கையில் ஒவ்வொரு நாளும் டிவியின் முன் ஆஜர் ஆகும் சராசரி ரசிகன் என்ற முறையில், நாளையும் என் விரல் நகங்களை பதம் பார்த்து விடுவேன்!



Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.
Counter