Thursday, October 07, 2004

இந்திய கிரிக்கெட் அணியின் சரிவு

பெங்களூர் டெஸ்ட் மேட்ச்சில் இந்திய அணி தோல்வியை நோக்கி வேகமாக முன்னேறிக்கொண்டிருக்கிறது. உலகின் தலைசிறந்த அணியாக மீண்டும் தன்னை பறை சாற்றியுள்ளது ஆஸ்திரேலியா. மார்டின் க்ளார்க் தன் முதல் ஆட்டத்திலேயே சதம் அடித்து சாதனை படைத்துள்ளார். கில்கிரிஸ்டும் தன் பங்கிற்கு சதம் அடிக்க, 474 ரன்களை குவித்தது ஆஸ்திரேலியா. ஸ்பின்னர்களின் சொர்கம் என கருதப்பட்ட பிட்சில், கெலன் மெக்ராத் மற்றும் காஸ்ப்ரொவிச் அருமையாக பந்து வீசி ஐந்து இந்திய விக்கெட்டுகளை விழ்தியுள்ளனர். ஷேன் வார்னின் அருமையான லெக் பிரேக் லட்சுமணனை விழ்த்த, 150/6 என்ற பரிதாபமான நிலையில் மூன்றாம் (கடைசி?) நாள் ஆட்டத்தை நம் அணி சந்திக்க உள்ளது.

இந்த முறை 2001 கொல்கத்தா மேஜிக் மீண்டும் நடைபெற ஆண்டவனை நாம் பிரார்த்தனை செய்வோமாக! கடந்த ஆறு மாதங்களாக, நம் மட்டையாளர்கள் மிக மட்டமாக ஆடி வருவதை அனைவரும் அறிவோம். ஆனால், உண்மையில் 2001க்கு பிறகு நம் அணியின் ஆட்டம் 'patchy'ஆக தான் இருந்து வருகிறது. 2002ல் வெஸ்ட் இன்டிஸ் டூரில் சுமாராக ஆடி 1-2 என்று தோல்வி அடைந்தனர். அதன் பிறகு, இங்கிலாந்தில், சம நிலையில் ட்ரா செய்தனர். ஆனால், அச்சமயத்தில் இங்கிலாந்து சுமாரான டீமாகத்தான் இருந்தது. பிறகு, நியூசிலாந்த் சென்று தோல்வியைத் தழுவினர். நியூசிலாந்த் அணி இந்தியா டூர் வந்த போதும் நாம் சுமாராகத்தான் விளையாடினோம்.
இந்திய அணி 2003-2004ல் ஆஸ்திரேலியா சென்று 1-1 என்ற வகையில் ட்ரா செய்தனர். ஆனால் என்னை பொருத்த வரையில் மெக்ராத், வார்ன், ப்ரெட் லீ இல்லாத ஆஸ்திரேலிய அணி பல் பிடிங்கிய பாம்பு போலத்தான் இருந்தது. எனவே, நாம் டிரா செய்தோம் என்று மார்தட்டிக்கொள்ள கூடாது என்பதே என் எண்ணம். அதே போல, அக்ரம், வகார் யூனஸ் இல்லாத பாகிஸ்தான் அணியைத்தான் நம் அணியால் வெல்ல முடிந்தது.

இந்த நிலைக்கு காரணம் என்ன? இந்த முறை சச்சின் இல்லாதது பெரிய இழப்பு. நம் அணியின் வீரர்கள் சிலரைப் பார்ப்போம்.

ஆகாஷ் சோப்ரா: 9 டெஸ்ட் மேட்ச் ஆடி, இரு முறை மட்டுமே அரை சதத்தை எட்டியுள்ளார். சுமாரான டெக்னிக் உடையவர். ஆனால் என்றைக்கும் மேட்ச் வின்னராகக் கூடிய திறமை இல்லாதவர்.

சேவாக்: திறமை இருந்தும், உதாசின போக்கால், அணிக்கு ஆற்ற வேண்டிய கடமையை மூன்றில் இரண்டு முறை தவற விடுபவர். (உதா: ICC trophy பாக் ஆட்டம், இன்றைய ஆட்டம் இரண்டிலும் ஆட்டம் இழந்த விதம்).

டிராவிட்: ICC test player of the yearஆனவுடன், யாராவது உப்பு சுற்றி போட்டிருந்தால் இப்படி தொடர்ச்சியாக fail ஆகாமல் இருந்திருப்பார்!

கங்குலி: தற்பொழுது ஒரளவுக்கு சுமாராக ஆடும் ஒரே ஆட்டக்காரர்.

லட்சுமணன்: பத்து இன்னிங்ஸ் ஆடினால், ஒன்றில் அட்டகாசமாக ஆடி, மற்ற ஒன்பதில் கேவலமான வகையில் ஆட்டமிழந்து, திரு திரு என characteristicஆக முழித்து பெவிலியன் திரும்புவதை பழக்கமாகிக் கொண்டிருப்பவர்.

யுவராஜ்: இவருக்கு என்ன ஆச்சு? ஆண்டவனுக்கே வெளிச்சம்!

ப்டேல்: சுமாரான விக்கெட் கீப்பர். முழங்கலுக்கும் கிழே எழும்பாத பிட்சிலும், இருபது அடிக்கு பின்னால் நின்று கொண்டு, பிடிக்காத கேட்சை பிடித்தேன் என்று சொல்லி, சைமன் கேட்டிச்சிடம் வாங்கிக் கட்டிக்கொள்பவர்!

ப்தான்: இந்திய அணியில் மட்டும் அல்ல, எந்த அணியிலும் தற்சமயம் இடம் பெறும் தகுதி படைத்த ஒரே இந்தியர்.

ஹர்பஜன்/கும்பிலே: உலகத் தர ஸ்பின்னர்கள் என்ற பெயரை ஆதிகாலத்தில் பெற்று, அந்த பெருமையிலேயே இன்றும் வாழ்ந்து வருபவர்கள்.

ஜாகிர் கான்: ஆன்ட்ரு லீபஸ் சம்பளம் வாங்க காரணமாக இருப்பவர்.

ஆக, இப்படிப்பட்ட மிகச் சாதாரணமான அணியிடம் அதிகமாக எதிர்பார்ப்பது நம் குற்றமோ??

ஆனாலும், 2001 கொல்கத்தா மேஜிக் மீண்டும் நடக்காதோ என்ற நம்பிக்கையில் ஒவ்வொரு நாளும் டிவியின் முன் ஆஜர் ஆகும் சராசரி ரசிகன் என்ற முறையில், நாளையும் என் விரல் நகங்களை பதம் பார்த்து விடுவேன்!



Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

1 Comments:

Blogger rajkumar said...

கவலைப் படாதீங்க ரவிக்குமார். இந்திய கிரிக்கெட் ரசிகன் வாழ்வில் இதெல்லாம் சகஜமப்பா..

5:40 AM  

Post a Comment

<< Home

Counter