Tuesday, February 01, 2005

நேயர் விருப்பம்

தமிழ் வானொலி நிகழ்ச்சிகள் என்றதும் என் நினைவிற்கு வருவது விவிதபாரதியின் நேயர் விருப்பம் நிகழ்ச்சிதான். ஒவ்வொருநாளும் விவிதபாரதி ஒருபக்கம் முழங்க, வேறொரு பக்கம் என் தாயார் தனக்குத் தெரிந்த இறைவழிபாட்டு பாடல்களை பாட, தரையில் ஹிந்து பேப்பரை விரித்து முந்தைய நாள் சார்ஜாவில் பாகிஸ்தானிடம் இந்திய தரும அடி வாங்கியதை படித்தபடி காபி உறிஞ்சும் சுகமே தனி. 1970/80'களில் வானொலி பெட்டி இல்லாத வீடே இருந்திருக்காது என்றால் அது மிகையாகாது. காலப்போக்கில் கொஞ்சம் கொஞ்சமாக டீவி வீட்டை ஆக்கிரமிக்க, வானொலி பெட்டியின் மவுசு குறைய ஆரம்பித்தது. ஆனாலும், அடிக்கடி வந்துபோகும் மின்வெட்டுகளின் போது இருட்டில் எங்களுக்கு துணை வானொலியே. கல்லூரி செல்லத்தொடங்கியவுடன் எனக்கும் வானொலிபெட்டிக்கும் இருந்த நட்பு அரவேவிட்டுபோனது.

புலம்பெயர்ந்த ஒருசில வருடங்கள் வானொலியை நான் கேட்கவேயில்லை. கடந்த ஒரு வருடமாக, வேலைக்கு காரில் செல்லும் போது வானொலியை மீண்டும் கேட்கத் தொடங்கினேன். இப்பொழுது பெரும்பாலும் கேட்பது பிபிசி நிகழ்ச்சிகள்தான். அதிலும் பிபிசி ரேடியொ 5 நியூஸ்/ஸ்போர்ட் பண்பலை அலைவரிசையே எனக்கு பிடித்தது. அன்றாட நடப்புகளை மையமாக வைத்து இதில் நடைபெறும் கலந்துரையாடல்கள், விளையாட்டுச் சிறப்பு வர்ணனைகள், இடையிடையே வானிலை, போக்குவரத்து செய்திகள், மற்றும் கலையுலக கிசுகிசுக்கள் என்று பட்டையை கிளப்புவார்கள். பயண அலைச்சலே தெரியாமல் அலுவலகம் வந்தடைவேன்.

இந்த வார நட்சத்திரம் பத்ரி விளையாட்டுக்கென ஒரு தனி தமிழ் வானொலி நிலையம் வரவேண்டும் என்றவகையில் எழுதியிருப்பதை படித்தேன். நல்ல எண்ணம். ஆனால் கிரிக்கெட்டைத்தவிர மற்ற ஆட்டங்களின் நேரடி வர்ணனைகள் (தமிழ்நாட்டில்) எந்த அளவிற்கு எடுபடும் என்பதுதான் கேள்வி. நீண்ட இடைவெளிக்கு பிறகு சூரியன் வானொலி அலைவரிசை மூலம் மீண்டும் வானொலியில் தமிழ் நிகழ்ச்சிகளை கேட்கும் (துர்)பாக்கியம் கிடைத்தது. சகிக்கவில்லை. ஒருமணி நேரம் நேயர்விருப்பம் போன்ற ஒரு நிகழ்ச்சியை கேட்டேன். ஒரே வழிசலாக இருந்தது. இந்த மாதிரி நிகழ்ச்சிகளில் வரும் தமிங்கலிசை தமிழ்குடிதாங்கிகளான மருத்துவரும் திருமாவும் இதுவரை கேட்கவில்லை போலும்!
Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

1 Comments:

Blogger அரவிந்தன் said...

நல்ல நினைவுகள்....விவித பாரதியில் 9.15 வண்ணக்க்சுடர் நாடகமும் அதை தொடர்ந்து வரு திரைபட விளம்பரங்களும் நான் தவறாமல் கேட்கும் நிகழ்ச்சிகள்..சில நேரங்களில் அப்படியே தூங்கிவிடுவேன் வானொலியை நிறுத்தாமல்..மறுநாள் என் அம்மா காரணம் சொல்லமல் அடித்த பிற்கு முதல் நாள் வானொலியை நிறுத்த மறந்தது நினைவுக்கு வரும்....

9:58 PM  

Post a Comment

<< Home

Counter