Friday, January 28, 2005

கருத்தரிக்க ஏற்ற வயது எது?

வாரப்பத்திரிகைகளின் நேரடிமோதல் கொஞ்சம் அதிகமாகிவிட்டது. குங்குமம் போனவாரம் "30 வயதுக்குமேல் குழந்தை பெறுவது ஆபத்து" என்று மக்களிடம் பீதிகிளப்பியிருப்பதை (முக்கியமாக சன் டீவி விளம்பரங்கள்மூலம்) அறிவோம். (அல்வாவும் இதைப் பதிந்திருந்தார்). இணையத்தில் குங்குமம் இல்லாததால் நான் படிக்கவில்லை. இதற்கு பதிலடியாக விகடன் இந்தவாரம் சில வல்லுனர்களை அணுகி இதைப்பற்றி அலசி ஒரு கட்டுரை வெளியிட்டுள்ளது. அதைப்படித்தேன். வல்லுனர்களின் கருத்து சகிக்கவில்லை.

பல்வேறு காரணங்களினால் இப்போது பெண்கள் திருமணம் செய்யும் வயது அதிகரித்துவிட்டது. மேலும், திருமணமான உடனே குழந்தை பெற்று கொள்ளாமல், பல காரணங்களுக்காக மகப்பேறை தள்ளிப்போடுவதை கண்கூடாகப் பார்க்கிறோம். என்வே முப்பதுவயதுக்குமேல் குழந்தை பெற விரும்புவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. எனவே இந்த சூழ்நிலையில் முக்கியமான கேள்வி "30 வயதுக்குமேல் குழந்தை பெறுவது ஆபத்தா?" என்பதே. இந்த கேள்விக்கு விகடன் கட்டுரையின் பதில் "ஆபத்தே இல்லை" என்பதே. இங்குதான் எனக்கு கொஞ்சம் இடிக்கிறது.

சில முக்கியமான ஆதாரங்களை பார்ப்போம். மகப்பேறுக்கு முக்கியமான ஒன்று கருத்தரிக்கும் தன்மை (fertility). பெண்களின்வயது ஏறும்பொழுது கருத்தரிக்கும் தன்மை முப்பது வயதுக்குமேல் சற்றே குறைந்து, நாற்பது வயதுக்குமேல் மிகவும் குறைந்துவிடுகிறது. (பார்க்க Fig. 1). என்வே, வயது ஏறஏற, இயற்க்கையாகவே கருத்தரிக்கும் வாய்ப்பு குறைகிறது. இதனால்தான், செயற்கைமுறை கருத்தரிக்கும் முறையை நாடுபவர்கள் பெரும்பாலும் அதிக வயதுடைய பெண்களே. மேலும், வயது ஏறஏற கருச்சிதைவு (spontaneous abortion) ஏற்படும் சதவிகிதம் உயர்கிறது (Fig.1). என்வே, 30 வயதுக்குமேல் கருத்தரிப்பதில் ஆபத்தில்லை என்ற வாதம் சற்றே மேலோட்டமான பார்வையாக தெரிகிறது.

"கடந்த வருடம் மார்ச் மாதம் எடுக்கப்பட்ட லேட்டஸ்ட் சர்வே முடிவுகள் இதை உறுதிப்படுத்து கின்றன. இதன்படிப் பார்த்தால் பெண்கள் கர்ப்பம் தரிப்பதற்கு பாதுகாப்பான வயது முப்பது முதல் முப்பதைந்து வயது வரை! நாற்பது வயதுகூட ஓகேதான் என்கிறது இந்த சர்வே. பிளட் பிரஷர், சர்க்கரை வியாதி போன்ற நோய் களின் தாக்கம் நாற்பது வயதில் ஏற்படுவதற்கான வாய்ப்பு சிறிதளவு இருப்ப தால், கூடுதலான மருத்துவ அக்கறை செலுத்த வேண்டியிருக்கும் என்றும் சர்வே சொல்கிறது. எங்கேயோ போவானேன்... எங்கள் மருத்துவமனையிலேயே நாற்பது வயதுக்கு மேற்பட்ட பலருக்கு ஜம்மென்று குழந்தைகள் பிறந்திருக்கின்றன. நெற்றியில் விரல், இரண்டு தலைகள், கூன் முதுகு போன்ற கோளாறுகளுடன் கூடிய குழந்தை பிறப்பதற்கு மரபியல் ரீதியான விஷயங்கள்தான் காரணமே தவிர, தாயின் வயது ஒரு காரணமாக இருக்க முடியாது. நெருங்கிய சொந்தத்துக்குள் கல்யாணம் செய்தால், இருபது வயதே ஆன பெண்ணுக்குக்கூட உடல்நலம் அல்லது மனநலம் குன்றிய குழந்தைகள் பிறக்கக் கூடும்" என்கிறார் ஒரு நிபுணர்!

இவர் குறிப்பிட்ட சர்வே எது எனத்தெரியவில்லை. ஒரே ஒரு சர்வேமூலம் காலம்காலமாக பற்பல ஆய்வுகள்மூலம் தெரியவந்த ஒன்றை நிராகரித்ததும் இல்லாமல் "பெண்கள் கர்ப்பம் தரிப்பதற்கு பாதுகாப்பான வயது முப்பது முதல் முப்பதைந்து வயது வரை" என்ற அபத்தத்தையும் உதிர்த்துள்ளார். தாயின் வயதுக்கும் கருவில் இருக்கும் குழந்தையின் குறைபாடுக்கும் தொடர்பில்லை என்ற அரைவேக்கட்டான பொன்மொழியையும் கூறியுள்ளார்.

குறைபாடான குழந்தைக்கு மரபியல் ரீதியான காரணங்களே மிகுதியென்றாலும், தாயின் வயது ஏறஏற குழந்தையின் மரபணுவில் மாறுதல்கள் ஏற்படுவதை பல ஆய்வுகள் தெரிவிகின்றன. முக்கியமாக "Downs Syndrome" கொண்ட குழந்தைகள் உருவாகும் வாய்ப்பு அதிகம்.(Fig. 2)சமீபத்திய ஆய்வுகளில், தந்தையின் வயதுகூட குழந்தையின் மரபணு மாறுதல்களை உருவாக்கக்கூடும் என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும்.

ஆதரங்கள் இப்படி இருக்கையில்,

"முப்பது வயது தாண்டி குழந்தை பெற்றுக்கொண்டால் குழந்தைக்கு Ôடவுன் சின்ட்ரோம் இருக்கும் (பார்ப் பதற்கு நார்மலாகவே இருக்கும் இந்தக் குழந்தைகள் செயல்பாட்டில் மந்தமாக காணப்படும்) என்ற கருத்தையும் சரி என்று சொல்ல முடியாது. முப்பது வயதுக்கு மேற்பட்ட நிலையில் குழந்தை பெற்ற சிலருக்கு Ôடவுன் சின்ட்ரோம்Õ குழந்தைகள் பிறந்திருக்கலாம். சரியாக ஆராய்ந்து பார்த்தால், நெருங்கிய உறவுகளுக்குள் திருமணம் செய்துகொள்வது, கருவுற்றிருக்கும் காலத்தில் தவறான மருந்துகளை உட்கொள்வது ஆகியவை தான் இதற்கு முக்கியக் காரணமாக இருக்கும்" என்கிறார் ஒரு மருத்துவர்!!

இப்படியும் ஒரு நிபுணர் கூறுவது எனக்கு வியப்பளிக்கிறது!!

தற்பொழுது இந்தியாவில் மட்டுமல்லாமல், உலக அளவில் சர்க்கரை வியாதி (type 2 diabetes) குறைந்தவயதிலேயே தாக்க ஆரம்பித்துள்ளது. இந்த நிலையில், முப்பது வயதுக்குமேல் கருத்தரிப்பதினால், மகப்பேறின் போது சர்க்கரைவியாதியின் தாக்கம் மேலும் அதிகமாகும் (gestational diabetes). இதனால், குழந்தையின் வளர்ச்சியில் சிக்கல்கள் வரக்கூடும். மேலும், வயது ஏறஏற இரத்தக்கொதிப்பு மேலும் மகப்பேறு சார்ந்த இரத்தக்கொதிப்பு (pregnancy-induced hypertension) பாதிப்பும் அதிகம்.


இப்படிப்பட்ட நிலையில், சமுதாய அக்கரையில்லாமல், ஒரு வெகுஜன பத்திரிகையும் வல்லுனர்களும் இவ்வகையான கட்டுரையை வெளியிட்டது சற்றே வருத்தமளிக்கிறது. அதிலும், குழந்தைபெற ஏற்ற வயது 30-35 என்ற வகையில் இந்த கட்டுரை இருப்பது கண்டிக்கத்தக்கது.

முப்பது வயதுக்கு மேலும் சுகமான குழந்தைப்பேறை அனுபவிக்கலாம் என்பதில் எனக்கு உடன்பாடுண்டு. ஆனால், இதனைப் பொதுப்படையாக கூற முடியாது. அந்தந்த பெண்ணின் உடல்நலம், குடும்ப/பரம்பரை சார்ந்த உடல்நலம் போன்றவையையும் கருத்தில் கொள்ள வேண்டும். இன்னும் இந்த விஷயத்தில் பல ஆய்வுகள் நடந்து வருகின்றன. தகுந்த ஆய்வுமுடிவுகள் வரும்வரையில், தற்போதைய மருத்துவ ஆதாரத்தின்படி மகப்பேறை தள்ளிப்போட்டுக்கொண்டே போகாமல் இருப்பதே உத்தமம்.

American Society of Reproductive Medicine வலைத்தளத்தின் சுட்டி இது
Figures: New England Journal of medicine Nov 2004

Disclaimer: The above comments are the personal views of the author and readers are adviced to consult their own doctors for further information




Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

4 Comments:

Anonymous Anonymous said...

கலக்கல் டிஸ்க்ளெய்மர்ப்பா!

10:58 PM  
Blogger அன்பு said...

அண்ணே அப்போ என்ன சொல்ல வர்ரீங்க...? குங்குமம் சன் டிவி வழியா கொஞ்சம் சத்தமா சொன்னது தப்பு அப்படியா!?

12:55 AM  
Blogger Vijayakumar said...

நல்ல சொன்னீங்க. எது எப்படியிருந்தாலும் நெருங்கிய உறவில் பெண் எடுத்துக் கொள்ளாமல் பருவத்தே பயிர் செய்வது நல்லது. நான் எழுதிய கட்டுரையில் எனக்கு அறிவியல் ஆதாரமாக சொல்ல முடியாவிட்டாலும் என் நண்பர்கள் வட்டாரத்தில், என்னுடைய சொந்த அனுபவத்தில், டாக்டர்கள் விட்ட டோஸ் ஆகியவைகளை கருத்தில் கொண்டு எழுதினேன். பத்திரிக்கைகளை விட்டுத் தள்ளுங்க.குங்குமம் பீதியை கிளப்பும் முன்னரே இந்த வயது ரீதியான பீதி எனக்கு சில வருடங்களுக்கு முன்னரே சில டாக்டர்களால் ஏற்ப்பட்டு விட்டது.

Disclamier தாங்க கலக்கல். அவரவர்கள் மருத்துவர்களை நாடுவதே சாலச் சிறந்தது.

2:08 AM  
Blogger Indianstockpickr said...

அன்பு சார்.....நான் குங்குமம் கட்டுரை படிக்கவில்லை. பொதுபடையாக ஒரு பீதியை கிளப்புவது தவறு. முப்பது வயதுக்கு மேலும் இயற்கையாகவே கர்ப்பம் தரித்து, ஆபத்தில்லாமல் குழந்தை பெற வாய்ப்புகள் நிறையவே உண்டு. இது ஒவ்வொருவரின் உடல்நலனை பொருத்தது. குங்குமம் செய்ததைக் காட்டிலும் விகடன் செய்த கட்டுரையில் பல சறுக்கல்கள். அந்த கட்டுரையை சரியாக படித்தால் ஒன்று தெளிவாகும்: அதில் அலசிய வல்லுனர்கள் யாவரும் செயற்கை வழியில் கருத்தரிக்கும் வழியில் வல்லுனர்கள். அவர்கள் பார்வையில் கருத்தரிக்க எந்த வயதும் பொருட்டல்ல. ஆனால் அத்ற்கான விலையையும் அவர்கள் கூறியிருந்தால் நமக்கு இன்னும் தெளிவாகும்!

Disclaimer பற்றி ஒரு வார்த்தை: எந்த ஒரு மருத்துவம் சார்ந்த அறிவுரையோ விளக்கமோ பொதுப்படையாக வெளியிடுகையில் இது கட்டாயம் இடம்பெறவேண்டும் என்பது என் கருத்து. ஏனெனில் ஒருவரின் கடந்த மருத்துவ வரலாறை அறிந்த பிறகே அவருக்கெற்ற வகையிலேயே அறிவுரை கூற வேண்டும். இப்படி ஒரு Disclaimer'ஐ மேற்கத்திய பத்திரிகைகள், செய்தி ஊடகங்கள், இணைய தளங்களில் காணலாம். குங்குமமும் சரி விகடனும் சரி இதைச் செய்யவில்லை. இவ்வாறு செய்யாவிடின் Medico-legal வழக்குகளுக்கு வழிவகுக்க வாய்ப்புண்டு.

7:58 AM  

Post a Comment

<< Home

Counter