Thursday, December 02, 2004

Tabloid செய்திகள்

தமிழ் செய்தி ஊடகங்களுக்கு இது ஒரு பொற்காலம்தான். செரினா, அண்ணாச்சி, ஜெயலட்சுமி, வீரப்பன், சங்கராச்சார்யார் போன்றோர் இவர்களிடம் வரிசையாகச் சிக்கி படாதபாடுபட்டுவிட்டார்கள். கரும்பு தின்ன கூலியா என்றவகையில் இவர்களை ஒவ்வொரு செய்தி ஊடகமும் தன் விருப்பவெறுப்பிற்கேற்ப தாளித்துவிட்டார்கள். பத்திரிகை தர்மம் என்பதெல்லாம் வெறும் பேச்சு என்பதை நிரூபிக்கும் வகையில் செய்திகள் தருகிற சாக்கில் ஆங்காங்கு கற்பனையையும் சேர்த்து "தூள்" தரணி மசாலாவையே மிஞ்சிவிடுவார்கள் போலிருக்கிறது! தொலைக்காட்சி ஊடகங்கள் இதற்கும் ஒரு படிமேல்போய் செய்திகளில் மட்டுமல்லாமல், சராசரி நிகழ்ச்சிகளிலும் நாசுக்காக இவர்களை புகுத்தி புளகாங்கிதம் அடைகிறார்கள்.

இப்படி பரபரப்பான செய்திகளை வெளிஉலகுக்கு அம்பலப்படுத்தி, தனிமனிதர்களையும் ஏன், ஆட்சிசெய்யும் அரசாங்கத்தையும் மிரட்டும் உத்தியை கையாளுவதில் கைதேர்ந்தவர்கள் பிரிட்டனில் வெளிவரும் Tabloid நாளேடுகள் (அகளத்தாள்களில் வெளிவரும் நாலேடுகள் Broadsheet எனவும், அறைத்தாள்களில் வெளிவரும் நாளேடுகள் Tabloid எனவும் அழைக்கப்படும்). அரசு இயந்திரத்தில் நடக்கும் சீர்கேடுகள், அரசின் முக்கிய கொள்கைகளை விமர்சித்தல், மந்திரிகளின் அந்தரங்கள், பொதுவாழ்வில் ஈடுபடுவோரின் சொத்துபத்துகள், சொந்தபந்தங்கள் (வளர்ப்புப் பிராணிகள் உட்பட), முக்கியமாக கால்பந்து ஆட்டக்காரர்களின் ஆட்டபாட்டங்கள் என ஒன்றையும் இவர்கள் விட்டுவைக்கமாட்டார்கள். அழகிய மாடல்களின் அரை நிர்வாணப் படங்கள், "புதிரா புனிதமா" வழியில் கேள்வி பதில்கள், கைவிடப்பட்ட காதலன்/காதலியின் உணர்ச்சிகரமான பேட்டிகள் என்று சூடான தகவல்களுடன் ஒவ்வொரு நாளும் பட்டையை கிளப்புவார்கள்.

கடந்தசில நாட்களில், பிரிட்டனின் உள்துறை மந்திரியான டேவிட் பிளங்கெட் செய்துள்ள மோசடிகளை டைலி மெயில் எனும் Tabloid பத்திரிகை ஆதாரத்துடன் வெளியிட்டுள்ளது. முதலில் நியூஸ் ஆப் தி வோர்ல்ட் எனும் பத்திரிகை பிளங்கெட் திருமணமான அமெரிக்க பெண்மனியான கிம்பெர்லி குவின் என்பவருடன் தொடர்பு வைத்திருப்பதாக செய்தி வெளியிட்டது. இதன் பிறகு, சன் எனும் நாளேடு குவின் கர்ப்பம் என செய்தி வெளியிட்டது. (இந்த கர்ப்பத்திற்கு காரணம் யார் என்ற சர்ச்சை எழுந்ததும் கூட!). இதுவல்ல பிரச்சினை.... குவின்னின் முதல் குழந்தையை கவனித்துக்கொள்ள பிலிபைன்ஸ் நாட்டைச் சேர்ந்த கசால்மே என்ற பெண்மணிக்கு பிரிட்டனில் நிரந்தரமாகத் தங்குவதற்க்கான விசாவை பெற தன் அதிகாரத்தை பயன்படுத்தினார் என்பதே. இந்த குற்றச்சாட்டை பிளங்கெட் மறுத்துள்ளார். பிரிட்டனில் எப்பொழுதும்போல ஒரு உள்விசாரணை கமிஷன் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது முடிந்தவுடன் உண்மை(?) தெரியவரும்.

பத்திரிகை விற்க நடிகையின் கவர்ச்சிப் படமோ, ரஜினியின் படமோ அட்டையில் வந்தகாலம்போய், சதி(லீலை) நாயகர்களின் படமே போதும் என்ற நிலை இப்பொழுது. இந்த மாற்றம் நல்லதா கெட்டதா என்பதை காலம் தான் சொல்லும்.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.
Counter