Saturday, February 19, 2005

மருந்துச்சீட்டும் பின்விளைவுகளும்

ராசாவின் பாட்டிக்கு கிருக்கெழுத்து மருந்துச்சீட்டினால் ஏற்பட்ட விபரீதத்தை படித்தேன். பாவம் அந்த வயதான பாட்டி. இத்தவறு நிகழ காரணமான மருத்துவரின் அலட்சிய போக்கு வருத்தமளிக்கிறது. மருந்துக்கடையின்மீதும் தவறிருக்கிறது. மருந்துச்சிட்டில் ஏதேனும் சந்தேகமிருந்தால் உடனடியாக குறிப்பிட்ட மருத்துவரிடம் கலந்து ஆலோசித்தபின்னரே மருந்தை கொடுத்திருக்கவேண்டும்.

இந்த நிகழ்ச்சி ஒரு முக்கியமான விவாதத்தை துவக்க ஏதுவாக இருக்கும் என நம்புகிறேன். இவ்விஷயத்தில் நுகர்வோரின் தவறும் பங்களிக்கிறது. ஒவ்வொரு மருந்துக்கும் ஒரு அடிப்படை ரசாயினப் பெயர் (generic name) உண்டு. அந்த ரசாயினப் பொருளின் காப்புரிமை முடிந்தாலோ, அல்லது காப்புரிமை சட்டத்திற்கு அப்பாற்பட்ட பொருளாக இருந்தாலோ, அதே மருந்தை பல தயாரிப்பாளர்கள் வெவ்வேறு வர்த்தக பெயரில் (Trade name) விற்பனை செய்கிறார்கள். மேலும் ஒரு குறிப்பிட்ட வியாதிக்கு அல்லது குறிப்பிட்ட உடல் பாகம் சம்பந்தப்பட்ட மருந்துகள் பல இருக்கும் நிலையில், மருந்து தயாரிப்பாளர்கள் குழப்பம் விளைவிக்கும் வகையில், இவ்வித மருந்துகளுக்கு ஒரே மாதிரியாக தொடங்கும் அல்லது முடியும் வர்த்தக பெயர்களை தருகிறார்கள். இந்தமாதிரியான பெயர் தவறுதான் இந்த நிகழ்ச்சியில் நடந்துள்ளது

சரி, இத்தவறுகளை குறைக்க என்ன வழி? மருத்துவர்கள் கிறுக்காமல் தெளிவாக மருந்துகளின் பெயர்களை எழுதவேண்டும். மருந்துக்கடைகளும் மருந்துச்சீட்டில் குழப்பம் இருந்தால் தாங்களாகவே முடிவு செய்து ஒரு மருந்தை கொடுக்காமல், மருத்துவரிடம் பேசியபின் மருந்தை விநியோகிக்க வேண்டும். மேற்கத்திய நாடுகளில், குறிப்பாக UK'வில் மருந்துகளின் ரசாயினப் பெயரில் (generic name) தான் பெரும்பாலும் மருந்துச்சீட்டுகள் வழங்கப்படுகின்றன. இதனால் தவறுகள் ஏற்படுவது தடுக்கப்படுகிறது. மேலும் மருத்துவர் குறிப்பிட்ட மருந்து நாம் அணுகிய கடையில் இல்லையென்றால், சோம்பல் பார்க்காமல், மாற்று மருந்தை ஏற்க்காமல் வேறொரு கடைக்குச் சென்று வாங்க முற்படவேண்டும்.

இதெல்லாம் நடைமுறையில் சாத்தியமா? மருந்துச்சீட்டே இல்லாமல் நாம் எத்தனை முறை மருந்துகள் வாங்குகிறோம்! ஒருசில மருந்துகளைத்தவிர இவ்வாறு மருந்துகளை வாங்குவதோ, விற்பதோ சட்டவிரோதம். சமீபத்தில் சன் டீவியில் தூக்க மருந்து பிரச்சினையை சிறப்புக் கண்ணோட்டத்தில் அலசினார்கள். புதுவிதிகள்படி, தகுந்த மருந்துச்சீட்டுடன் மட்டுமே தூக்க மருந்துகளை வாங்கமுடியும். மேலும் ஒரு குறிப்பிட்ட படிவத்தில் கையெழுத்திட்டபின்னரே இந்த மருந்துகள் விநியோகிக்க வேண்டும். இதற்கு பல காரணங்கள் உண்டு. தூக்க மருந்துகளை தகுந்த மருத்துவ ஆலோசனையில்லாமல் உட்கொள்வது ஆபத்து. மேலும் இவைகளின் பல போதை மருந்துகள் போல் addict'ஆக வாய்ப்புகள் உண்டு. தூக்க மருந்து என்ற போர்வையில் பல போதை வஸ்துக்கள் விற்பனை செய்யப்பட்டுவருவதை தடுக்கவே இந்த நடவடிக்கை. இந்தவிதியை ஆட்சேபிப்பவர்கள் யார் தெரியுமா? மருந்துக்கடையாளர்கள்! இந்த நடைமுறையால் அவர்களின் விற்பனை தடைபடுகிறதாம்! என்ன ஒரு சமுதாயப் பார்வை!

இதைவிட கொடுமை போலிமருந்து வியாபாரம். இந்த குற்றத்தின் அளவு சரியான புள்ளிவிவரங்கள் இல்லாததால் நமக்கு தெரிவதில்லை. இந்த வருடம்முதல் மருந்துகளின் காப்புரிமைச் சட்டம் மாறியிருப்பதை நான் முன்பே பதிந்திருக்கிறேன். இது முழுவீச்சில் நிலுவையில் வந்தவுடன், இந்த போலிமருந்தின் தாக்கம் இன்னும் அதிகரிக்க வாய்ப்புண்டு. போதும் போதாததுக்கு இந்திய மருந்து கட்டுப்பாடு வாரியம் மேற்கத்திய நாடுகளில் தடை செய்யப்பட்ட பல மருந்துகளை இன்னும் இந்தியாவில் விற்பனையில் விட்டுவைத்துள்ளது!

இந்தநிலை மாற இன்னும் விழிப்புணர்வு வரவேண்டும். தகுந்த மருத்துவ ஆலோசனையின்றி நாமே மருந்துகளை தேர்ந்தெடுத்து வாங்குவதை நிறுத்தவேண்டும். மருத்துவரிடம் தெளிவாக அவர்தரும் மருந்தின் பெயர், அதன் செயல்பாடு, இதர விலைவுகள் போன்றவற்றை கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும். முக்கியமாக, நமக்கு நன்கு தெரிந்த, நம்பகமான கடையில் மட்டுமே மருந்துகளை வாங்க வேண்டும்.

இதே விஷயத்தைப்பற்றி கணேசன் அவர்களின் பதிவுச் சுட்டி இங்கே

ஒரு கொசுறுச் செய்தி: உடல் வலி... அதிலும் முட்டு வலிக்கு சமீபத்தில் செலிபிரெக்ஸ் (Celebrex [celecoxib]) மற்றும் வையாக்ஸ் (Vioox [rofecoxib]) என்ற ஒருவகை மருந்துகள் விற்பனையில் உள்ளன. இந்த வகை மருந்துகளினால், மாரடைப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாக மருத்துவ உலகின் தலையாய மருத்துவஏடு ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. இந்த மருந்துகளை உபயோகிப்பவர்கள் தத்தம் மருத்துவரிடம் ஆலோசனை செய்தபின் மாற்று மருந்து உட்கொள்வது உத்தமம்.
Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

3 Comments:

Blogger Balaji-Paari said...

நல்ல பதிவு.
தூக்க மாத்திரையை வாங்க prescription தேவை என்பது முன்னமே இருக்க கூடிய விதி என்றே என் நினைவு. ஆனால் இந்த கையெழுத்து சமாச்சாரம் நான் அறியாதது. நன்றிகள்.

6:49 PM  
Blogger ராஜா said...

This comment has been removed by a blog administrator.

6:04 PM  
Blogger ராஜா said...

ரவிகுமார்: இந்த பிரச்சினையின் பின்புலங்களை, கருத்தில்கொள்ள வேண்டிய விடயங்களைப் பற்றி விரிவாக அலசியிருக்கிறீர்கள்.

சந்தையில் தாரளமாக புழங்கும் போலி மருந்துகளை முதலில் முற்றிலுமாக ஒழிக்க வேண்டும். மருந்துகளை மாற்றிக்கொடுப்பதைவிட இந்த போலி மருந்துகளால் உண்டாகும் ஆபத்து அதிகம். அசலுக்கும் போலிக்கும் எளிதில் வித்தியாசம் காண இயலாத அளவிற்கு ஒத்த பெயரை வைத்து மருந்துகளை விற்கிறார்கள். உதாரணமாக, ஒருமுறை வலி நிவாரணி மாத்திரை Novaljin ஐ கொடுக்குமாறு கடையில் கேட்டதற்கு தோற்றத்திலும், பெயரிலும் அதே மாதிரியிருந்த Novalgen என்கிற மாத்திரையை கடைக்காரர் கொடுத்தார். அதை திருப்பிக்கொடுத்துவிட்டு சரியானதை கேட்டுப் பெற்றுக்கொண்டேன். அப்போது அது மோசடி வியாபார முயற்சி என்பதை நான் உணரவில்லை. ஏதோ மாற்றிக் கொடுத்துவிட்டார்கள் என்றே எண்ணினேன்.

போலி மருந்துகளை விற்பதில் கடைக்காரர்கள் ஆர்வம் காட்ட காரணம் அதில் கிடைக்கும் அபரிமிதமான லாபம். 6 காசு, 7 காசுகளுக்கு வாங்கும் மாத்திரைகளை அதன் அசலுடைய விலைக்கு ஒப்பாக 1 ரூபாய், 2 ரூபாய்க்கு விற்க முடிகிறது. கிட்டத்தட்ட 30 மடங்கு லாபம் எளிதில் கிடைக்கிறது. இந்தியா முழுக்க ஆழ வேரூன்றியிருக்கும் இந்த விஷ விருட்சத்தை அழிக்க கடுமையான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும். ஒருவேளை ஏற்கனவே கடுமையான தண்டனைகளுடன் கூடிய தகுந்த சட்டங்களிருந்து அமுல்படுத்தப்படாமல் இருக்கக்கூடும். நம் நாட்டில் நிறைய சட்டங்கள் அப்படித்தான் ஏட்டளவில் உறங்கிக்கொண்டிருக்கின்றன.

6:10 PM  

Post a Comment

<< Home

Counter