ஒரு உணர்ச்சிபூர்வமாண விவாதம்
மணிக்கூண்டின் பதிவில் நடந்து வருகிறது. இதை லேசாக திரித்து ஒரு கற்பனையில் ரவுசுப்பாண்டி ஸ்டைலில் ஒரு பதிவு
ம. கூண்டு: பட்டைச் சாராயம் அனைவரும் குடிக்க வேண்டும் என போராடும் தானைத் தலைவர் குருமாவின் சிங்கப்பூர் பயணத்தை மிக சாதரணமாக என் வலைப்பூவில் வைத்தேன். சிங்கப்பூரில் இருக்கும் இளைஞர்கள் அவருடன் ரவுண்டு கட்டி ஜோதியில் கலக்கனுமென்ற நல்லெண்ணத்தில்.
ஒரு நண்பர் கூப்பிட்டு நீ என்ன டாஸ்மாக் பினாமியா என்று கேட்கிறார். மற்றொருவர் நீங்கள் பாக்கெட் ஊறுகாய் நிறுவனத்தைச் சார்ந்தவரா? இன்னொருவர் உனக்கேன் இந்த வேலை என்கிறார்.
நான் செஞ்சதென்ன தப்பா....(இந்தியன் கமல் பாணியில்) ?
எல்லவற்றிற்க்கும் முத்தாய்ப்பாக நண்பர் Rumகி சில கேள்விகளை முன்வைத்தார். அவற்றிக்கு நேரிடையான என் பதிலையும் என் சில கருத்துகளையும் பகிர்ந்துக் கொள்வது என் கடமை.
Rumகி யின் கேள்விகள்:
சைகோ, தேவதாஸ், தானைத் தலைவர் குருமா உலகம் பூரா சுற்றி வந்து என்னதான் செய்கிறார்கள்? இவர்களை வரவேற்பது யார்? சொந்த காசில் வருகிறார்களா? சம்பந்தப்பட்ட நாட்டின் சாராய மார்க்கெட் எப்படி இருக்கிறது என பார்க்கவா செல்கிறார்கள்? வெளி நாடுகளில் தமிழர்கள் பெரும்பாலானோர் பெரும்பாலும் அடிப்பதோ பீரும் விஸ்கியும். அப்படியிருக்க, குருமா போன்றோருக்கு வரவேற்பு எப்படியிருக்கிறது?
என் மனதை பாதித்த கேள்வி, "வெளி நாடுகளில் தமிழர்கள் பெரும்பாலனோர் பெரும்பாலும் அடிப்பதோ பீரும் விஸ்கியும். அப்படியிருக்க, குருமா போன்றோருக்கு வரவேற்பு எப்படியிருக்கிறது?"
அது எப்படி Rumகி நீங்கள் அப்படி நினைக்கலாம்? இது தவறான சிந்தனை அல்லாவா? எனக்கு தெரிந்து பட்டைச் சாராயம் காய்ச்சி குடிக்கும் ஏராளமான நபர்கள் வெளிநாடுகளில் இருக்கிறார்கள். அதுமட்டும் அல்ல அவர்கள் தன்னுடைய நண்பர்களுக்கும் ஊத்திக் கொடுக்கிறார்கள். எனக்கு தெரிந்த பீர் விஸ்கியடிக்கும் பலர் சுயநலமாக தான் உண்டு தன் மப்புண்டு என்று நடந்துக் கொள்வதை பார்த்து இருக்கிறேன்.
குருமா போன்றோருக்கு வரவேற்பு எப்படி இருக்கிறது? இந்த கேள்வியின் உண்மையான அர்த்தம் என்ன? குருமா என்றால் இளக்காராமா? குருமா பட்டைச் சாராயம் குடிப்பார் என்பதால் மக்கள் அவர்களை மதிக்கிறார்களா? என்று தானே நீங்கள் கேட்கிறீர்கள்?
நம் மக்களில் ஒரு சிலர் என்னதான் படித்தாலும், எத்தனை இலக்கியப் பயின்றாலும், எத்தனை நாடுதான் போனாலும், பட்டைச் சாராயம் குடிப்போரை கேவலப்பட்டவர்களாக பார்க்கும் இம் மாதிரி மனநிலை என்றுதான் மாறுமோ என காத்திருக்கிறேன்.
உண்மையை சொல்லப் போனால் குருமா போன்ற தலைவர்களுக்கும் பட்டைச் சாராயத்திற்கும் நல்ல மரியாதை வெளிநாட்டு வாழ் மத்தியில் இருக்கிறது. அதுவும் குறிப்பாக படித்தவர்கள் மத்தியில், மப்பார்வமிக்க தமிழ் உணர்வாளர்களிடையே பெருத்த மரியாதையையும், பாசமும், அன்பும், நேசமும் குருமா மீது உள்ளது. நம்புங்கள்!
அதே போல் பீர் விஸ்கியடிக்கும் பலரும் எஸ்வி சேகர், கிரேசி மோகன், மாதவன், பம்பாய் ஜெயஸ்ரீ, பம்பாய் சகோதிரிகள், ஹரிஹரன், உன்னி கிருஸ்ணன் இப்படிப் பட்ட மக்களுக்குதான் அதிக ஆர்வத்தை காட்டுகிறார்கள்.
நடப்பு என்னவெனில், பட்டை சாராயத்தோடு, சைடில் கடிக்க ஊறுகாயையும், ஊதித்தள்ள சார்மினார் பீடியையும், காலப்போக்கில், பார்த்து ரசிக்க ரெக்கார்ட் டான்ஸையும் கொண்டுவரத் துடிக்கும் குருமா போன்ற தலைவர்களை உணர்வு பூர்வமான தமிழ் அமைப்புகள் கூப்பிட்டு அவர்களை ஊக்கப் படுத்துகிறது, இனியும் இந்த ஊக்கம் தொடரும்.
அவர்களை அணைத்துக் கொள்வோம் வாருங்கள். அல்லது தவறான கண்ணோட்டத்தில் பார்க்காமல் இருப்போம். அவர்களோடு சேர்ந்து சல்பேட்டா போடுவோம் வாங்கள்..அவர்கள் மப்பை அள்ளித்தரும் சோமபானத்தை அளிக்கும் அமுதசுரபிகள். கை கொடுப்போம் வாருங்கள்.
Shivvas regal said,
மப்பில்லிருந்தவனையும் தெளிய வைக்கும் பதிவு.. நன்றி கூண்டு
McDowell said,
அருமையான பதிவு. உங்கள் அழைப்பும் சிறப்பானதாக இருக்கிறது. மலேசியா வருகிறாரா?
Golden eagle said,
ஒரு நிமிடம் உங்களை பட்டைச் சாராய பிரியராக சித்தரித்துக்கொள்ள Rumகியை பயன்படுத்தி மிகவும் தந்திரமான ஒரு பதிவு இது என்று நினைத்துவிட்டது என் மனது... பிறகு நாம்தான் விஸ்கி பிரியராயிற்றே, நம் மனசு இப்படியெல்லாம் நினைக்கக்கூடாதே என்று சுயநினைவு வந்தவுடன் மீண்டும் படித்த போதுதான் உங்கள் பதிவின் உண்மையான அக்கறை தெரிந்தது... வாழ்க
Rumகி said,
திட்டிய நண்பர்களுக்கும் மனமுவந்து விளக்கம் கொடுத்த நண்பர்களுக்கும் நன்றி. நான் கேட்ட கேள்வியில் குசும்பு எதுவுமில்லை. அப்படியொரு சாயம் வந்துவிடக்கூடாதே என்பதற்காகத்தான் எச்சரிக்கையாகவே கேள்வியை ஆரம்பித்தேன். ஆனால், கேள்வி கேட்டதற்கும் ஒரு காரணம் இருக்கிறது.
விஸ்கி அடித்து கவுந்தடிச்சி புரள்வது வெளிநாடுகளில் மட்டும் நடப்பதல்ல. இங்கும் ஒரே ரவுண்டு பீரடித்துவிட்டு காதல் சோகத்தை காட்டி ஒப்பாரியடிக்கும் எத்தனையோ ஆசாமிகளை பார்த்திருக்கிறோம் என்பதையும் எல்லோரும் ஒப்புக்கொள்வார்கள் என்று நினைக்கிறேன்.
17.6.2005. மயிலாடுதுறை நகராட்சி வாசலில் ஒரு சாராய ஆர்ப்பாட்ட கூட்டம். பட்டையடித்தவனை காவல்துறையினர் தவறாக பேசியதை கண்டித்து ஒருநாள் ஆர்ப்பாட்டம். குருமா அமைப்புகளிலிருந்து நிறையபேர் திரண்டிருந்தார்கள். கொஞ்சமாய் போக்குவரத்து நெரிசல். 'இவனுங்களுக்கு வேற வேலையே இல்லை'ன்னு கமெண்ட் அடித்தவர்களில் பாதிப்பேர் பட்டை சாராய பார்ட்டிகள்தான். இதுதான் எங்க ஊர் நிலைமை.
கலைஞர் ஆட்சியின் போது சில எம்.எல்.ஏக்களை வெளிநாடுகளுக்கு அனுப்பும் திட்டம் பற்றி சட்டமன்றத்தில் விவாதிக்கப்பட்டது. சட்டமன்றத்திற்கு வெளியே கருத்து தெரிவித்த குருமா வெளிநாடுகளுக்கு சென்று திரும்பும் அமைச்சர்களோ, எம்எல்ஏக்களோ பட்டை சாராய பெருமையையா எடுத்துக்கூறுவார்கள் என்று கேள்வி எழுப்பியிருந்தார். அப்படி கருத்து சொன்ன ஒருவர் வெளிநாடு சுற்றுப்பயணத்தின் போது என்னதான் செய்கிறார், சைகோ; தேவதாஸ் போன்றவர்களுக்கு கூடும் கூட்டம் குருமாவுக்கும் கூடுகிறதா என்பதை தெரிந்து கொள்ளும் சில்லுண்டித்தனமான கேள்விதான். இதில் உள்குத்து இல்லை. இளக்காரம் என்றெல்லாம் சொல்வதின் அர்த்தம் புரியவில்லை. மற்றபடி சைகோ தேவதாஸ், குருமா போன்ற தனிநபர்கள் மீது எனக்கு எவ்வித காழ்ப்புணர்ச்சியோ, கவர்ச்சியோ இல்லை. அதற்கு அவசியமும் இல்லை. வெள்ளித்திரையில் பார்த்தாலே பத்து ரவுண்ட் ஓல்ட் மான்க் Rumமடித்த போதை தரும் தலைவன் எனக்கு சினிமா தியேட்டர் வெளிச்சத்திலேயே தாராளமாக கிடைக்கிறான்.
(சமீப காலமாக அனல் தெறிக்கும் தமிழ்மணத்தின் சூட்டைதணிக்கும் ஒரு முயற்சியே இந்த பதிவேயன்றி யாரை மனதையும் புண்படுத்தவல்ல!)