Thursday, June 30, 2005

புதுசு கண்ணா புதுசு




புதுப்பொலிவுடன் மலர்ந்திருக்கிறது சென்னை அரசுப் பொது மருத்துவமனை. மிகவும் வரவேற்கப்படவேண்டிய ஒரு முன்னேற்றம். ஒரு மருத்துவமனை சரிவர இயங்குவதிற்கு சுத்தமான சூழல் இன்றியமையாதது. துவக்கவிழாவன்று இருக்கும் நிலையைப்போல் இனிவரும் காலங்களில் இதனை பராமரிக்கும் கடமை அரசுக்குள்ளது.

அரசு மருத்துவமனைகளின் தலையாய கடமை ஏழை நோயாளிகளுக்கு சேவை செய்வதும், மருத்துவபடிப்புக்கு உதவியாக இருப்பதும். ஆனால், அரசு மருத்துவமனைகளில், முக்கியமாக சென்னை பொதுமருத்துவமனையில் அனைத்து மருத்துவபிரிவுகளின் மிகவும் அனுபவம் வாய்ந்த மற்றும் நுட்பமான மருத்துவர்கள் உள்ளனர். இவர்களின் அனுபவத்தை சரியாக பயன்படுத்தி, புதியதாக கட்டப்பட்டுள்ள, பணம் கொடுத்து இயங்கும் பிரிவுகளில் ஏழை அல்லாதோருக்கு தரம்வாய்ந்த சேவை அளித்து, அதில் வரும் வருமானத்தை, மற்ற இலவச சேவைகளில் பயன்படுத்தலாம். இந்தவகையில், பிரிட்டனில் உள்ள National Health Service செய்யும் சேவைகளை காணும்போது, இதை ஒரு முக்கிய விடயமாக நம் அரசு மருத்துவமனைகளும் செய்தால், பயன் இன்னும் அதிகமாகும். இதை சரிவர செய்தால், மற்ற தனியார் மருத்துவமனைக்கு நிகரான, ஏன், அதைவிட சிறப்பான தரத்தை, சற்றே குறைந்த செலவில் மக்களுக்கு அளிக்க முடியும். செய்வார்களா, பொறுத்திருந்து பார்ப்போம்.
Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Tuesday, June 28, 2005

ரவுசுப் பாண்டி: என்று தணியும் இந்த சா(ரா)யம்?

ஒரு உணர்ச்சிபூர்வமாண விவாதம் மணிக்கூண்டின் பதிவில் நடந்து வருகிறது. இதை லேசாக திரித்து ஒரு கற்பனையில் ரவுசுப்பாண்டி ஸ்டைலில் ஒரு பதிவு

ம. கூண்டு: பட்டைச் சாராயம் அனைவரும் குடிக்க வேண்டும் என போராடும் தானைத் தலைவர் குருமாவின் சிங்கப்பூர் பயணத்தை மிக சாதரணமாக என் வலைப்பூவில் வைத்தேன். சிங்கப்பூரில் இருக்கும் இளைஞர்கள் அவருடன் ரவுண்டு கட்டி ஜோதியில் கலக்கனுமென்ற நல்லெண்ணத்தில்.

ஒரு நண்பர் கூப்பிட்டு நீ என்ன டாஸ்மாக் பினாமியா என்று கேட்கிறார். மற்றொருவர் நீங்கள் பாக்கெட் ஊறுகாய் நிறுவனத்தைச் சார்ந்தவரா? இன்னொருவர் உனக்கேன் இந்த வேலை என்கிறார்.

நான் செஞ்சதென்ன தப்பா....(இந்தியன் கமல் பாணியில்) ?

எல்லவற்றிற்க்கும் முத்தாய்ப்பாக நண்பர் Rumகி சில கேள்விகளை முன்வைத்தார். அவற்றிக்கு நேரிடையான என் பதிலையும் என் சில கருத்துகளையும் பகிர்ந்துக் கொள்வது என் கடமை.

Rumகி யின் கேள்விகள்:

சைகோ, தேவதாஸ், தானைத் தலைவர் குருமா உலகம் பூரா சுற்றி வந்து என்னதான் செய்கிறார்கள்? இவர்களை வரவேற்பது யார்? சொந்த காசில் வருகிறார்களா? சம்பந்தப்பட்ட நாட்டின் சாராய மார்க்கெட் எப்படி இருக்கிறது என பார்க்கவா செல்கிறார்கள்? வெளி நாடுகளில் தமிழர்கள் பெரும்பாலானோர் பெரும்பாலும் அடிப்பதோ பீரும் விஸ்கியும். அப்படியிருக்க, குருமா போன்றோருக்கு வரவேற்பு எப்படியிருக்கிறது?

என் மனதை பாதித்த கேள்வி, "வெளி நாடுகளில் தமிழர்கள் பெரும்பாலனோர் பெரும்பாலும் அடிப்பதோ பீரும் விஸ்கியும். அப்படியிருக்க, குருமா போன்றோருக்கு வரவேற்பு எப்படியிருக்கிறது?"

அது எப்படி Rumகி நீங்கள் அப்படி நினைக்கலாம்? இது தவறான சிந்தனை அல்லாவா? எனக்கு தெரிந்து பட்டைச் சாராயம் காய்ச்சி குடிக்கும் ஏராளமான நபர்கள் வெளிநாடுகளில் இருக்கிறார்கள். அதுமட்டும் அல்ல அவர்கள் தன்னுடைய நண்பர்களுக்கும் ஊத்திக் கொடுக்கிறார்கள். எனக்கு தெரிந்த பீர் விஸ்கியடிக்கும் பலர் சுயநலமாக தான் உண்டு தன் மப்புண்டு என்று நடந்துக் கொள்வதை பார்த்து இருக்கிறேன்.

குருமா போன்றோருக்கு வரவேற்பு எப்படி இருக்கிறது? இந்த கேள்வியின் உண்மையான அர்த்தம் என்ன? குருமா என்றால் இளக்காராமா? குருமா பட்டைச் சாராயம் குடிப்பார் என்பதால் மக்கள் அவர்களை மதிக்கிறார்களா? என்று தானே நீங்கள் கேட்கிறீர்கள்?

நம் மக்களில் ஒரு சிலர் என்னதான் படித்தாலும், எத்தனை இலக்கியப் பயின்றாலும், எத்தனை நாடுதான் போனாலும், பட்டைச் சாராயம் குடிப்போரை கேவலப்பட்டவர்களாக பார்க்கும் இம் மாதிரி மனநிலை என்றுதான் மாறுமோ என காத்திருக்கிறேன்.

உண்மையை சொல்லப் போனால் குருமா போன்ற தலைவர்களுக்கும் பட்டைச் சாராயத்திற்கும் நல்ல மரியாதை வெளிநாட்டு வாழ் மத்தியில் இருக்கிறது. அதுவும் குறிப்பாக படித்தவர்கள் மத்தியில், மப்பார்வமிக்க தமிழ் உணர்வாளர்களிடையே பெருத்த மரியாதையையும், பாசமும், அன்பும், நேசமும் குருமா மீது உள்ளது. நம்புங்கள்!

அதே போல் பீர் விஸ்கியடிக்கும் பலரும் எஸ்வி சேகர், கிரேசி மோகன், மாதவன், பம்பாய் ஜெயஸ்ரீ, பம்பாய் சகோதிரிகள், ஹரிஹரன், உன்னி கிருஸ்ணன் இப்படிப் பட்ட மக்களுக்குதான் அதிக ஆர்வத்தை காட்டுகிறார்கள்.

நடப்பு என்னவெனில், பட்டை சாராயத்தோடு, சைடில் கடிக்க ஊறுகாயையும், ஊதித்தள்ள சார்மினார் பீடியையும், காலப்போக்கில், பார்த்து ரசிக்க ரெக்கார்ட் டான்ஸையும் கொண்டுவரத் துடிக்கும் குருமா போன்ற தலைவர்களை உணர்வு பூர்வமான தமிழ் அமைப்புகள் கூப்பிட்டு அவர்களை ஊக்கப் படுத்துகிறது, இனியும் இந்த ஊக்கம் தொடரும்.

அவர்களை அணைத்துக் கொள்வோம் வாருங்கள். அல்லது தவறான கண்ணோட்டத்தில் பார்க்காமல் இருப்போம். அவர்களோடு சேர்ந்து சல்பேட்டா போடுவோம் வாங்கள்..அவர்கள் மப்பை அள்ளித்தரும் சோமபானத்தை அளிக்கும் அமுதசுரபிகள். கை கொடுப்போம் வாருங்கள்.

Shivvas regal said,

மப்பில்லிருந்தவனையும் தெளிய வைக்கும் பதிவு.. நன்றி கூண்டு

McDowell said,

அருமையான பதிவு. உங்கள் அழைப்பும் சிறப்பானதாக இருக்கிறது. மலேசியா வருகிறாரா?

Golden eagle said,

ஒரு நிமிடம் உங்களை பட்டைச் சாராய பிரியராக சித்தரித்துக்கொள்ள Rumகியை பயன்படுத்தி மிகவும் தந்திரமான ஒரு பதிவு இது என்று நினைத்துவிட்டது என் மனது... பிறகு நாம்தான் விஸ்கி பிரியராயிற்றே, நம் மனசு இப்படியெல்லாம் நினைக்கக்கூடாதே என்று சுயநினைவு வந்தவுடன் மீண்டும் படித்த போதுதான் உங்கள் பதிவின் உண்மையான அக்கறை தெரிந்தது... வாழ்க

Rumகி said,

திட்டிய நண்பர்களுக்கும் மனமுவந்து விளக்கம் கொடுத்த நண்பர்களுக்கும் நன்றி. நான் கேட்ட கேள்வியில் குசும்பு எதுவுமில்லை. அப்படியொரு சாயம் வந்துவிடக்கூடாதே என்பதற்காகத்தான் எச்சரிக்கையாகவே கேள்வியை ஆரம்பித்தேன். ஆனால், கேள்வி கேட்டதற்கும் ஒரு காரணம் இருக்கிறது.

விஸ்கி அடித்து கவுந்தடிச்சி புரள்வது வெளிநாடுகளில் மட்டும் நடப்பதல்ல. இங்கும் ஒரே ரவுண்டு பீரடித்துவிட்டு காதல் சோகத்தை காட்டி ஒப்பாரியடிக்கும் எத்தனையோ ஆசாமிகளை பார்த்திருக்கிறோம் என்பதையும் எல்லோரும் ஒப்புக்கொள்வார்கள் என்று நினைக்கிறேன்.

17.6.2005. மயிலாடுதுறை நகராட்சி வாசலில் ஒரு சாராய ஆர்ப்பாட்ட கூட்டம். பட்டையடித்தவனை காவல்துறையினர் தவறாக பேசியதை கண்டித்து ஒருநாள் ஆர்ப்பாட்டம். குருமா அமைப்புகளிலிருந்து நிறையபேர் திரண்டிருந்தார்கள். கொஞ்சமாய் போக்குவரத்து நெரிசல். 'இவனுங்களுக்கு வேற வேலையே இல்லை'ன்னு கமெண்ட் அடித்தவர்களில் பாதிப்பேர் பட்டை சாராய பார்ட்டிகள்தான். இதுதான் எங்க ஊர் நிலைமை.

கலைஞர் ஆட்சியின் போது சில எம்.எல்.ஏக்களை வெளிநாடுகளுக்கு அனுப்பும் திட்டம் பற்றி சட்டமன்றத்தில் விவாதிக்கப்பட்டது. சட்டமன்றத்திற்கு வெளியே கருத்து தெரிவித்த குருமா வெளிநாடுகளுக்கு சென்று திரும்பும் அமைச்சர்களோ, எம்எல்ஏக்களோ பட்டை சாராய பெருமையையா எடுத்துக்கூறுவார்கள் என்று கேள்வி எழுப்பியிருந்தார். அப்படி கருத்து சொன்ன ஒருவர் வெளிநாடு சுற்றுப்பயணத்தின் போது என்னதான் செய்கிறார், சைகோ; தேவதாஸ் போன்றவர்களுக்கு கூடும் கூட்டம் குருமாவுக்கும் கூடுகிறதா என்பதை தெரிந்து கொள்ளும் சில்லுண்டித்தனமான கேள்விதான். இதில் உள்குத்து இல்லை. இளக்காரம் என்றெல்லாம் சொல்வதின் அர்த்தம் புரியவில்லை. மற்றபடி சைகோ தேவதாஸ், குருமா போன்ற தனிநபர்கள் மீது எனக்கு எவ்வித காழ்ப்புணர்ச்சியோ, கவர்ச்சியோ இல்லை. அதற்கு அவசியமும் இல்லை. வெள்ளித்திரையில் பார்த்தாலே பத்து ரவுண்ட் ஓல்ட் மான்க் Rumமடித்த போதை தரும் தலைவன் எனக்கு சினிமா தியேட்டர் வெளிச்சத்திலேயே தாராளமாக கிடைக்கிறான்.

(சமீப காலமாக அனல் தெறிக்கும் தமிழ்மணத்தின் சூட்டைதணிக்கும் ஒரு முயற்சியே இந்த பதிவேயன்றி யாரை மனதையும் புண்படுத்தவல்ல!)
Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Saturday, June 25, 2005

திரைப்படங்களுக்கு WHO சான்றிதழ்

சமுதாயத்தை கெடுக்கும் வகையில் திரைப்படங்களில் இடம்பெறும் புகைபிடிக்கும் மற்றும் மது அருந்தும் காட்சிகளுக்கு தடை விதித்ததை தொடர்ந்து, மேலும் சமுதாயம் சீர்பட, மேலும் சில தடை யோசனைகள்:

- இனி திரைப்படங்களில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, தற்கொலை, பிக்பாக்கெட், லஞ்சம், கந்துவட்டி, சம்பந்தப்பட்ட காட்சிகளுக்கு தடை

- திரைப்படங்களில் இனி வன்முறையை வளர்க்கும் ஆயுதங்கள்- பிலேடு, சைக்கிள் செயின், அருவாள், துப்பாக்கி போன்றவைக்கு தடை

- வன்முறையை தூண்டும் கதாபாத்திரங்கள், முக்கியமாக வில்லன் கதாபாத்திரத்துக்கு தடை

- ஃபாஸ்ட் ஃபுட், சுவீட், எண்ணை பதார்த்தங்கள், கோக் வகையறாக்கள், போன்ற உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கும் உணவுப் பொருட்களை திரையில் காட்ட தடை

- இனி கொடுமை செய்யும் மாமியார் மற்றும் கணவர், ஈவ் டீஸிங் காட்சிகள், சாலைவிதியை மீறும் காட்சிகள், பொய் சொல்லும் கதாபாத்திரங்கள் போன்றவை இடம்பெறக்கூடாது.

- கெட்ட வார்த்தைகள், அவமரியாதைச் சொற்கள்- "நீ, வா, போ, டேய், வாடா, வாடி, போடி," போன்ற ஒற்றைப்பட சொற்களுக்கு தடை

- இயற்கை மற்றும் பௌதீக விதிகளை மீறும் காட்சிகளுக்கு தடை

- உடற்பயிற்சி, யோகா, மெடிடேஷன், போன்ற காட்சிகள் கட்டாயம் இடம்பெறவேண்டும்

- இந்திய சென்ஸார் போர்ட் சான்றிதழைத் தவிர, உலக சுகாதாரக் குழுமத்தின் சான்றிதழையும் ஒவ்வோரு திரைப்படமும் பெற வேண்டும்
Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Tuesday, April 05, 2005

திருமணமும் தேர்தலும்

இங்கிலாந்தின் ராஜவம்ச திருமணங்களுக்கும் கத்தோலிக்க சர்ச்சுக்கும் ஏழாம் பொருத்தம்தான் போலிருக்கிறது. போப்பாண்டவரின் இறுதிச்சடங்கு வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவிருப்பதால், அதே தினத்தில் நடைபெறவிருந்த சார்லஸ்-கமிலா திருமணம் ஒத்திவைக்கபட்டது நமக்கு தெரியும்.

1532'ம் ஆண்டுவரையில் இங்கிலாந்து ராஜவம்சம் வாடிகன் கத்தோலிக்க சர்ச்சின் கட்டுப்பட்டில் இயங்கிவந்தனர். அப்போது ஆட்சியிலிருந்த ஹென்றி VIII, ஆண் வாரிசு இல்லாத காரணத்தினாலும், Anne Boyelen என்ற பெண்ணின் மீதுகொண்ட மோகத்தினாலும், தன்னுடைய திருமணத்தை ரத்து செய்யவும், Anne'ஐ திருமணம் செய்யவும் அப்போதைய போப்'ஐ அணுகினான். போப் மறுக்கவும், சட்டச் சீர்திருத்தம் மூலம், சர்ச் ஆஃப் இங்கிலாந்து (Church of England) என்ற சர்ச்சை நிறுவி தன்னையே அதன் தலைவனாக்கிகொண்டு, விவாகரத்து பெற்று, Anne'ஐ மணந்தான்.(அவள் மூலமும் ஆண் வாரிசு இல்லாததால், அவளையும் விவாகரத்து செய்தது வேறு விஷயம்!) போப்பாண்டவரின் மறைவுக்கு வருத்தம் தெரிவிக்கும் வகையில் திருமணத்தை தள்ளிவைத்தபடியால், சார்லஸ்-கமிலா மீது சற்றெ வெகுஜனமதிப்பு கூடியுள்ளது.

டோனி பிளேயர் ஒரு வழியாக மே 5'ம் இங்கிலாந்து பொது தேர்தல் என்று அறிவித்துவிட்டார். இந்தமுறை தேர்தலில் கடும் போட்டி இருக்கும் என்று பேச்சு அடிபடுகிறது. ஒரு சில தேர்தல் கணிப்புகள் கன்சர்வேட்டிவ் கட்சி சற்றே முண்ணனியில் உள்ளதென்று தெரிவிக்கின்றன. Door knocking, baby kissing தேர்தல் பிரச்சாரம் தொடங்கிவிட்டது. அமெரிக்க தேர்தல் அளவுக்கு இல்லையென்றாலும் கொஞ்சம் சுவாரசியமாக இருக்குமென்று நினைக்கிறேன். இதனைபற்றி அவ்வப்போது ஒரு சில பதிவுகளாவது பதிய ஆசை. பார்க்கலாம்.
Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Tuesday, March 01, 2005

NASAமாய் போனது!

கொஞ்ச நாளுக்கப்பறம் இணைய உலாவந்தபோது உத்தர் பிரதேஷின் பல்லியா என்ற கிராமத்தைச் சேர்ந்த சவுரப் சிங் என்ற 15-வயது மாணவன் NASA நடத்திய அறிவியல் போட்டியில் முதலிடம் வாங்கிய செய்தியை படித்தேன். (இதற்கு முன்னர் அப்துல் கலாமும், கல்பனா சாவ்லாவும் இதே போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்றார்களாம்). பையன் கலக்கிட்டான் என்று நினைத்துக்கொண்டேன். இந்த சவுரப் சிங் செய்தி உண்மையில்லை என்றவகையில் செய்திகள் வரத்துவங்கின. NASA இந்த வகையில் எந்த ஒரு போட்டியும் நடத்தவில்லை என மறுத்ததாக rediff செய்தி வெளியிட்டது. இந்த நிலையில், தான் Oxford சென்று இந்த பரிட்ச்சையில் கலந்து கொண்டதாகவும், அவர்கள் அளித்த சான்றிதழ் ஒன்றையும் சவுரப் காண்பித்துள்ளான். NASA என்ற பெயர் போர்வையில் வேறு ஏதோ ஒரு நிறுவனம் செய்த சதி போலத்தான் எனக்கு தோன்றுகிறது. இந்த சதியில் சவுரப் மற்றும் குடும்பத்தாரின் பங்கு உண்டா என்பது கேள்வி. அவர்களும் இந்த சதியில் ஏமாந்தவர்கள் என்றே நினைக்கிறேன்.




இப்படிப்பட்ட செய்தியை நம்பி ஏமாந்து கலாம் வாழ்த்துச் செய்தி அனுப்பினார் (??) என்பதை நினைக்கையில் சிரிப்பு தான் வருகிறது.

சமீப காலமாக இந்தியா பற்றிய ஃபீல் குட் செய்திகளை செய்தி ஊடகங்களில் நிறைய காண முடிகிறது. New Scientist கூட சென்ற வார இதழில் இந்தியா பற்றிய சிறப்புப் பார்வையை வெளியிட்டிருந்தது. ஆனால், இந்தியாவோ/இந்தியர்களோ மேற்கத்திய நாடுகளின் அங்கீகாரம் கிடைத்துவிட்ட பெருமைபோதையில் மயங்கிவிடாமல், சுயசோதனைமுறையில் கவனம் செலுத்துவது அவசியம்.
Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Saturday, February 19, 2005

மருந்துச்சீட்டும் பின்விளைவுகளும்

ராசாவின் பாட்டிக்கு கிருக்கெழுத்து மருந்துச்சீட்டினால் ஏற்பட்ட விபரீதத்தை படித்தேன். பாவம் அந்த வயதான பாட்டி. இத்தவறு நிகழ காரணமான மருத்துவரின் அலட்சிய போக்கு வருத்தமளிக்கிறது. மருந்துக்கடையின்மீதும் தவறிருக்கிறது. மருந்துச்சிட்டில் ஏதேனும் சந்தேகமிருந்தால் உடனடியாக குறிப்பிட்ட மருத்துவரிடம் கலந்து ஆலோசித்தபின்னரே மருந்தை கொடுத்திருக்கவேண்டும்.

இந்த நிகழ்ச்சி ஒரு முக்கியமான விவாதத்தை துவக்க ஏதுவாக இருக்கும் என நம்புகிறேன். இவ்விஷயத்தில் நுகர்வோரின் தவறும் பங்களிக்கிறது. ஒவ்வொரு மருந்துக்கும் ஒரு அடிப்படை ரசாயினப் பெயர் (generic name) உண்டு. அந்த ரசாயினப் பொருளின் காப்புரிமை முடிந்தாலோ, அல்லது காப்புரிமை சட்டத்திற்கு அப்பாற்பட்ட பொருளாக இருந்தாலோ, அதே மருந்தை பல தயாரிப்பாளர்கள் வெவ்வேறு வர்த்தக பெயரில் (Trade name) விற்பனை செய்கிறார்கள். மேலும் ஒரு குறிப்பிட்ட வியாதிக்கு அல்லது குறிப்பிட்ட உடல் பாகம் சம்பந்தப்பட்ட மருந்துகள் பல இருக்கும் நிலையில், மருந்து தயாரிப்பாளர்கள் குழப்பம் விளைவிக்கும் வகையில், இவ்வித மருந்துகளுக்கு ஒரே மாதிரியாக தொடங்கும் அல்லது முடியும் வர்த்தக பெயர்களை தருகிறார்கள். இந்தமாதிரியான பெயர் தவறுதான் இந்த நிகழ்ச்சியில் நடந்துள்ளது

சரி, இத்தவறுகளை குறைக்க என்ன வழி? மருத்துவர்கள் கிறுக்காமல் தெளிவாக மருந்துகளின் பெயர்களை எழுதவேண்டும். மருந்துக்கடைகளும் மருந்துச்சீட்டில் குழப்பம் இருந்தால் தாங்களாகவே முடிவு செய்து ஒரு மருந்தை கொடுக்காமல், மருத்துவரிடம் பேசியபின் மருந்தை விநியோகிக்க வேண்டும். மேற்கத்திய நாடுகளில், குறிப்பாக UK'வில் மருந்துகளின் ரசாயினப் பெயரில் (generic name) தான் பெரும்பாலும் மருந்துச்சீட்டுகள் வழங்கப்படுகின்றன. இதனால் தவறுகள் ஏற்படுவது தடுக்கப்படுகிறது. மேலும் மருத்துவர் குறிப்பிட்ட மருந்து நாம் அணுகிய கடையில் இல்லையென்றால், சோம்பல் பார்க்காமல், மாற்று மருந்தை ஏற்க்காமல் வேறொரு கடைக்குச் சென்று வாங்க முற்படவேண்டும்.

இதெல்லாம் நடைமுறையில் சாத்தியமா? மருந்துச்சீட்டே இல்லாமல் நாம் எத்தனை முறை மருந்துகள் வாங்குகிறோம்! ஒருசில மருந்துகளைத்தவிர இவ்வாறு மருந்துகளை வாங்குவதோ, விற்பதோ சட்டவிரோதம். சமீபத்தில் சன் டீவியில் தூக்க மருந்து பிரச்சினையை சிறப்புக் கண்ணோட்டத்தில் அலசினார்கள். புதுவிதிகள்படி, தகுந்த மருந்துச்சீட்டுடன் மட்டுமே தூக்க மருந்துகளை வாங்கமுடியும். மேலும் ஒரு குறிப்பிட்ட படிவத்தில் கையெழுத்திட்டபின்னரே இந்த மருந்துகள் விநியோகிக்க வேண்டும். இதற்கு பல காரணங்கள் உண்டு. தூக்க மருந்துகளை தகுந்த மருத்துவ ஆலோசனையில்லாமல் உட்கொள்வது ஆபத்து. மேலும் இவைகளின் பல போதை மருந்துகள் போல் addict'ஆக வாய்ப்புகள் உண்டு. தூக்க மருந்து என்ற போர்வையில் பல போதை வஸ்துக்கள் விற்பனை செய்யப்பட்டுவருவதை தடுக்கவே இந்த நடவடிக்கை. இந்தவிதியை ஆட்சேபிப்பவர்கள் யார் தெரியுமா? மருந்துக்கடையாளர்கள்! இந்த நடைமுறையால் அவர்களின் விற்பனை தடைபடுகிறதாம்! என்ன ஒரு சமுதாயப் பார்வை!

இதைவிட கொடுமை போலிமருந்து வியாபாரம். இந்த குற்றத்தின் அளவு சரியான புள்ளிவிவரங்கள் இல்லாததால் நமக்கு தெரிவதில்லை. இந்த வருடம்முதல் மருந்துகளின் காப்புரிமைச் சட்டம் மாறியிருப்பதை நான் முன்பே பதிந்திருக்கிறேன். இது முழுவீச்சில் நிலுவையில் வந்தவுடன், இந்த போலிமருந்தின் தாக்கம் இன்னும் அதிகரிக்க வாய்ப்புண்டு. போதும் போதாததுக்கு இந்திய மருந்து கட்டுப்பாடு வாரியம் மேற்கத்திய நாடுகளில் தடை செய்யப்பட்ட பல மருந்துகளை இன்னும் இந்தியாவில் விற்பனையில் விட்டுவைத்துள்ளது!

இந்தநிலை மாற இன்னும் விழிப்புணர்வு வரவேண்டும். தகுந்த மருத்துவ ஆலோசனையின்றி நாமே மருந்துகளை தேர்ந்தெடுத்து வாங்குவதை நிறுத்தவேண்டும். மருத்துவரிடம் தெளிவாக அவர்தரும் மருந்தின் பெயர், அதன் செயல்பாடு, இதர விலைவுகள் போன்றவற்றை கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும். முக்கியமாக, நமக்கு நன்கு தெரிந்த, நம்பகமான கடையில் மட்டுமே மருந்துகளை வாங்க வேண்டும்.

இதே விஷயத்தைப்பற்றி கணேசன் அவர்களின் பதிவுச் சுட்டி இங்கே

ஒரு கொசுறுச் செய்தி: உடல் வலி... அதிலும் முட்டு வலிக்கு சமீபத்தில் செலிபிரெக்ஸ் (Celebrex [celecoxib]) மற்றும் வையாக்ஸ் (Vioox [rofecoxib]) என்ற ஒருவகை மருந்துகள் விற்பனையில் உள்ளன. இந்த வகை மருந்துகளினால், மாரடைப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாக மருத்துவ உலகின் தலையாய மருத்துவஏடு ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. இந்த மருந்துகளை உபயோகிப்பவர்கள் தத்தம் மருத்துவரிடம் ஆலோசனை செய்தபின் மாற்று மருந்து உட்கொள்வது உத்தமம்.
Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Thursday, February 10, 2005

IKEA mania

மூன்று புக் ஷெல்ஃப், ஒரு டெஸ்க், என் மகளின் பெட்: இவை அனைத்தையும் என் காரின் டிக்கியில் ஏற்றிக்கொண்டு வீட்டை நோக்கி பயணம். இது சாத்தியமில்லை என சிலர் எண்ணக்கூடும். சத்தியமான உண்மை! பிரிட்டனில் உள்ள குழந்தையை கேட்டால் கூட சொல்லிவிடும் நான் ஐகியா'விலிருந்து இந்த பொருட்களை வாங்கி வருகிறேன் என்று!



வீட்டை அழகு செய்ய குறைந்த விலையில், அதே சமயம் ஸ்டைலாகவும் இருக்கும் பொருட்களை வாங்க வேண்டுமா... ஐகியா (IKEA) இருக்க பயமேன்! ஐகியா கடையில் வீட்டுப் பொருட்களை வாங்குவது ஒரு புதுவிதமான அனுபவம்! இங்கு எல்லாமே நாம்தான். உள்ளே சென்றதும் கையில் ஒரு பென்சிலும் இன்ச் டேப்பும் கையில் எடுத்துக்கொள்ள வேண்டும். குறுக்கும் நெடுக்குமாக (நம்மை போலவே) பலரும் இன்ச் டேப் சகிதமாக சுற்றிக்கொண்டிருப்பர். காட்சியில் வைத்திருக்கும் அனைத்து பொருட்களின் விலை சீட்டில் அந்தந்த பொருளை நாம் எடுக்க வேண்டிய இடத்தின் குறிப்பு இருக்கும். கடை முழுதும் இதே வழிமுறைதான். தேவையான பொருட்களின் இருப்பிடங்களை குறிப்பு எடுத்தபின், கடையின் இறுதியில் உள்ள கோடவுனில் நாமே அந்தந்த பொருட்களை ட்ராலியில் ஏற்றிக்கொண்டு பணம் செலுத்தியபின் காரில் ஏற்றிக்கொண்டு வரவேண்டியதுதான். அனைத்து பொருள்களும் தட்டையாக மடக்கிவைத்தே (flatpack) விற்கப்படுவதால் காரில் போட்டு எடுத்துவர மிகவும் சுலபம்.

இந்த ஐகியாமேனியாவை துவக்கியவர் இங்வார் காம்ப்ராட் என்பவர். ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்தவர். பால்காரனாக வாழ்கையைத் தொடங்கி, 1943'ல் ஸ்டாக்ஹோமில் ஐகியாவை துவங்கினார். தற்பொழுது 31 நாடுகளில் 186 கிளைகளைக் கொண்ட ஒரு மாபெரும் நிறுவனமாக வளர்ந்து நிற்கிறது. ஐரோப்பவின் 10% சதவிகித மக்கள் உறங்குவது ஐகியா கட்டில்களில்தான். ஐகியாவின் பொருள் அட்டவணை புத்தகம் பைபிளை காட்டிலும் பெருவாரியான ஐரோப்ப மக்களின் வீட்டில் இருக்கிறது! ஐகியாவின் நிறுவனர் காம்ப்ராட்தான் 2004'ல் உலகிலேயே பணம் படைத்தவர் என்ற பேச்சும் எழுந்தது. இருப்பினும், 78 வயதான இவர் இன்றும் பந்தா இல்லாமல், அரசுப் பேருந்தில்தான் பயணம் செய்கிறாராம்!

ஞாயிற்றுக்கிழமையிலும் திநகர் ரங்கநாதன் தெருபோல் காட்சியளிக்கும் ஐகியா கடை, லண்டணில் புதிதாகத் துவக்கிய கடையை நேற்று முப்பதே நிமிடத்தில் மூடிவிட்டது!! காரணம்: முதல்நாள் தள்ளுபடி விற்பனையில் ஏற்பட்ட நெரிசலில் ஐந்துபேர் காயமடைந்து மருத்துவமனை செல்ல நேர்ந்ததால்தான்! காயமடைந்தவர்களை flatpack'ஆக எடுத்துச் சென்றிருக்காமல் இருந்தால் சரி!!

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.
Counter