Monday, January 17, 2005

சபாஷ் சரியான போட்டி

இங்கிலாந்து கிரிக்கெட் அணி நாளுக்குநாள் ஜெட் வேகத்தில் முன்னேறிவருகிறது. இன்று தெற்கு ஆப்ரிக்க அணியை 77 ரன்கள் வித்தியாசத்தில் நான்காவது டெஸ்டில் நம்பமுடியாதவகையில் வெற்றி கண்டு, இந்த தொடரில் 2-1 என்றவகையில் முன்னணியில் உள்ளது. மேற்கிந்திய அணி, நியூசிலாந்து, ஜிம்பாப்வே, என வரிசையாக ஒவ்வொரு அணியையும் வீழ்த்தி, இப்பொழுது தெற்கு ஆப்ரிக்க அணியையும் ஒரு கைபார்த்துவருகிறது.

2004'ம் ஆண்டு இங்கிலாந்து கிரிக்கெட் சரித்திரத்தில் ஒரு மைல்கல். தொடர்ச்சியாக 9 டெஸ்ட் போட்டிகளில் வென்றது ஒருமிகப்பெரிய சாதனை. இந்த வளர்ச்சிக்கு பலமுக்கிய காரணங்கள் உண்டு. அவர்களுடைய தற்போதைய வேகப்பந்து வீச்சாளர்கள் (ஸ்டீவ் ஹார்மிசன், மாத்தியூ ஹொக்கார்ட், பிலின்டாஃப் மற்றும் சைமன் ஜோன்ஸ்) அனைவரும் மிகச் சிறந்தவகையில் விளையாடிவருகிறார்கள். இரண்டாவதாக, அவர்களின் துவக்க ஆட்டக்காரர்களான ஆன்ட்ரு ஸ்ட்ராஸ் மற்றும் டிரஸ்காதிக் இருவரும் சரியான ஃபார்மில் உள்ளனர். கடந்த ஆண்டின் மிகச்சிறந்த புதுமுகம் ஆன்ட்ரு ஸ்ட்ராஸ் என்றால் அது மிகையாகாது. புதிய விக்கெட் கீப்பரான ஜெரன்ட் ஜோன்ஸ் ஒரு நல்ல கண்டுபிடிப்பு. பிலின்டாஃபின் மட்டைத்திறனும் நன்கு வலுவடைந்துள்ளது. இது மற்றுமன்றி, ஆஷ்லி ஜைல்ஸின் சுழற்பந்து வீச்சும் மேம்பட்டுள்ளது. இப்படி கோர்வையாக அவர்களின் அணி ஒவ்வொரு ஆட்டத்துறையிலும் முன்னேறியுள்ளது. இந்த அணியின் ஒரே பலவீனம்: மத்திய மட்டையாளர் வரிசை. வாகன், தோர்ப், இருவரும் அவ்வப்போது சொதப்பிவிடுகிறார்கள்.

உலகின் தலைசிறந்த அணியான ஆஸ்திரேலிய அணிக்கு சவால்விடும் அளவில் தற்சமயத்தில் உள்ள ஒரே அணி இங்கிலாந்து அணியே என்பது என் கருத்து. இந்த ஆண்டு இங்கிலாந்தில் நடக்கவிருக்கும் 'ஆஷஸ்' தொடர் ஒரு நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.(இத்தொடரின் பல ஆட்டங்களுக்கான டிக்கெட்டுகள் விற்றுத்தீர்ந்துவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது). இனியும் உலகின் இரண்டாம்நிலை அணி இந்தியஅணி என கூறுவது கேலிக்கூத்தாகும். ICC உலக டெஸ்ட் வரிசையே இதற்கு சான்று. அனேகமாக அடுத்த பிரிடோரியா டெஸ்ட் மேட்சிலும் இங்கிலாந்தே வெற்றிபெறும் என நினைக்கிறேன். 'ஆஷஸ்' தொடர் ஒரு விருவிருப்பான தொடராக இருக்கும் என எதிர்பார்க்கிறேன். இயன் போதமை இனி வர்ணனை பெட்டியில் சமாளிப்பது கடினமே!!!
Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

0 Comments:

Post a Comment

<< Home

Counter